அவர்கள் திரும்பி வந்துகொண்டிருக்கிறார்கள் - ஜெ.பிரான்சிஸ் கிருபா

திருட்டுச் சந்தையிலிருந்து என்னைத் தேடி
திரும்பிவந்துகொண்டிருக்கிறார்கள் திருடர்கள்
என்னிடமிருந்து திருடிச் சென்ற பொருள்களோடு

அவர்கள் வந்து சேருமுன்னே நான்
இங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட வேண்டும்

விலை உயர்ந்த பன்னிரண்டு வைரக்கல்லும்
மூன்று தங்க முள்ளும் பதித்த
என் கைக்கடிகாரத்தை
கடைக்காரனிடம் நீட்டியதும்
ஓடுவதற்கு மாறாக அது பாடியிருக்கிறது

பாடிக்கொண்டே ஓடும் கடிகாரம்
கூடுதல் சிறப்புதானே என்றுதானே
நினைக்கிறீர்கள்
அப்படித்தான் நினைத்தார்கள் ஆரம்பத்தில்
திருடனும் கடைக்காரனும்

கடிகாரத்தில்
கறாராக நேரம் காட்ட வேண்டிய முட்கள்
பாடலுக்கேற்ப
காப்ரே நடனமாடத் தொடங்கியிருக்கின்றன
அதைக் கண்ட கடைக்காரனுக்கு
கண்ட மாத்திரத்திலேயே
பாட்டும் பிடித்திருக்கிறது
பைத்தியமும் பிடித்திருக்கிறது

அணிந்திருந்த உடைகளைக் கிழித்தெறிந்தபடி
கடைவீதியில் ஓடியிருக்கிறான்
விதைக்கொட்டைகள் குலுங்க

குழம்பிப்போன திருடன் தயக்கத்தோடு
அடுத்த கடைக்குள்
அடியெடுத்து வைக்கும்போதே
கடை முதலாளி
அரைஞாண் கயிற்றை அறுத்து
அவனே அவன் கழுத்தை
இறுக்கிக்கொண்டிருந்திருக்கிறான்
கண்கள் தெறித்து கல்லா பெட்டியில்
விழுந்திருக்கின்றன.

கண்ட அதிர்ச்சியில்
எச்சில் விழுங்கிய திருடன்
பிசகாக நாக்கையும் சேர்த்து
விழுங்கிவிட்டானாம்
எனவே திட்ட மாட்டான்
திட்டவும் முடியாது என்று
கண்மூடித்தனமாக நம்பக் கூடாது
வெட்டிப் பொலிபோடும் வெறியோடும்
வந்துகொண்டிருக்கலாம்

ஆகவே நண்பர்களே...
நான் இங்கிருந்து
இப்போதே கிளம்பியாக வேண்டும்
மற்ற திருடர்களுக்கு நடந்ததை
மற்றொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்!   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்