குப்பையைக் கிளறாதீர் - லிபி ஆரண்யா

ஓவியம்: ரமணன்

ண்டிகைகள் மீது
கேள்வியெழுப்பலாகாது
கொண்டாட்டம் முக்கியமல்லவா

இன்று நேரத்திலேயே
எழுந்துகொண்டீர்கள்
நல்லது

தேய்த்துக் குளிக்க நல்லெண்ணெய்
பதஞ்சலியிலா
வாங்கியிருக்கிறீர்கள்
சிகைக்காய்..?

தலையில் எண்ணெய்
வைத்துக்கொண்டீர்களா
அளவாய் நீர்விட்டு
சிகைக்காய் தூளைக்
கட்டிப்படாது மசியுங்கள்
ரெண்டும் கொஞ்சம் ஊறட்டுமே

அதுவரை நேரத்தை வீணடிக்கலாமா
தித்திப்பு நாள்களின் ஒவ்வொரு
துளியும் முக்கியம்
அளவில் பெரிய
சரஸ்வதி வெடியைப் பிரியுங்கள்
அவள் மூக்கைக் கிள்ளுங்கள்
பத்தியை நீட்டிப் பத்தவையுங்கள்
டமா...ர்
வாசல் முழுக்கக் காகிதத்துண்டுகள்
ஒன்று உங்கள் கன்னத்தில் தெறிக்கிறது
அதில் அனிதாவின் பாதி முகம்
மீதி முகமும்
அந்தக் குவியலில்தானிருக்கிறது
தயைகூர்ந்து கிளறாதீர்
கவுரி லங்கேஷ்
மாட்டிறைச்சிக்காய் அடித்துக் கொல்லப்பட்டவன்
பணமதிப்பு நீக்க நீள்வரிசை
விவசாயிகள் தற்கொலை
ஜி.எஸ்.டி என
ஒவ்வொன்றும் கசப்பின் துண்டுகளாயிருக்கலாம்

இந்தக் குப்பைநினைவுகளைப்
பெருக்கித்தள்ளத்தான்
சொச் பாரத் அழைக்கிறது

போதும்
கண்ணில் எண்ணெய் வேறு இறங்கிவிட்டது
போங்கள் போய்
தலைமுழுகி வாருங்கள்
கேசமாவது பிசுக்கற்று இருக்கட்டும்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick