கடைசித் தீர்ப்பு நாள் - சுகிர்தராணி

நீ என் இரண்டாவது தூக்கணாங்குருவி
தானியங்களின் கதிரறுக்கும் குளிர்மிகுந்த காலத்தில்
பறந்துபோன அக்குருவி திரும்பவேயில்லை
ரத்தம் கருத்த வலிகளை
சேமித்துச் சேமித்துக் காவலிருக்கையில்
ஓர் இறகு என்மீது உதிர்ந்தது
அதன் நீட்டித்த நிழலின் இறுதியில் நீயிருந்தாய்
உப்புச்சுவை நதிகள் வறண்டிருந்தன
மலைகளின்மேல் பசும்புற்கள் எவையும் இல்லை
ஆயினும்
மண்ணுக்குள் புதைக்கப்பட்ட திராட்சையின்
மெல்லிய கசப்புநீரைப்போல
எனக்குப் பருகக் கொடுக்கின்றாய்
கீறும்போது பால் வழியும் செடியின்
பூவாசம் மிகுந்த காற்றினை
என் பக்கம் ஊதிவிடுகிறாய்
என்னுடலின் ஏடுகள் அதில்தான் படபடக்கின்றன
உன் வாயிலிருந்து உதிரும் சொற்களை
ஒவ்வொன்றாய்ச் சேகரிக்கின்றேன்
நான் அலைவுறும் வனாந்தரத்தில்
அவை திசை காட்டும் ஒளிக்கற்கள்
உன் இதயத்தின் ஈர்க்குச்சிகளாலான கூட்டினுள்
என்னைக் கதகதப்பாக்கி அணைத்துக்கொள்கிறாய்
மூன்றாம் குருவியின் இரண்டாவது கவிதையை
ஒருவேளை நான் எழுத நேர்ந்தால்
என் விரல்களை முறித்துப் போடு
நம் உயிரின் கடைசித் தீர்ப்பு நாளில். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick