ஒரு குவளைத் தனிமை - ஸ்டாலின் சரவணன்

னாந்தரத்தில் புழுபூச்சியென
மனிதர்கள் இழைந்து திரியும்
இந்த மாநகரத்தில்
அத்தனை எளிதல்ல
தனிமைப்படுத்திக்கொள்வது.
அலுவலகம் வரும் வழக்கமான பாதையில்
உடலெங்கும் புண் மணக்கும் வயோதிகனே
இன்று எனக்குப் பிச்சையிடு உன் தனிமையை.
மிகுந்த வாஞ்சையோடு பற்றவரும் கரத்தை
சட்டென உதறும் நெஞ்சத்தைத் தா.
இரவில் நம்மீது கால் போடும் தொடையை
சிகரெட் கங்கால் துளைக்கும் குரூரத்தை
கடன் வாங்கியேனும் இருத்தச் செய்.
எட்டி உதைத்தாலும்
போக மாட்டேனென்று காலைக் கட்டி அழும் ஒரு ப்ரியத்தை
குரல்வளை மென்னியில் கால்பெருவிரல்கொண்டு அழுத்து.
பதில் அனுப்பாவிட்டாலும்
குறுந்தகவலிட்டபடியே இருக்கும் அன்பை
ப்ளாக் செய்ய இயலா கையறுநிலை கட.
மிரட்டி, அடித்து, கெஞ்சிப் பார்த்தும்
அடி தூரம்கூட விலகாத காதலை
கெட்ட வார்த்தைகளைத் தெறிக்கவிட்டு
நாயென கல்கொண்டு தெருவில் விரட்டு.
இடுகாட்டுக்குச் செல்கிறேன் என்றாலும்
தானும் வருவதாக
பெவிலியனில் ஏறி அமரும்
அன்பொழுகும் இந்தப் புட்டத்தில்
சவுக்கை விளாசினால் தப்பா?
அந்த மதுக்கடையில்
எல்லோரும் நிம்மதியை வாங்குவதாகப் பேச்சிருந்தது
சென்றபோது நீள்வரிசையில் நிறுத்தினர்.
ஆலயங்களில் பிரசாதம் பெறும் பக்தனென தள்ளப்பட்டிருந்தேன்.
அந்த முனையில் கடவுள் கை நடுநடுங்க
மிகக் கவனமாக நிறைந்திருந்ததிலிருந்து
மறுகையிலிருந்த காலிப் போத்தலை
சமப்படுத்தும் பணியில் பரபரப்பாயிருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick