இவன் - அகரமுதல்வன்

ஓவியங்கள் : செந்தில்

வனுக்குச் சொந்தவூர் யாழ்ப்பாணம். இரண்டு காதுகளும் கேட்காது. இயக்கம் அடிச்சுத்தான் காது கேட்காமல் போனது. இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டு நாட்டிலயிருந்து வெளியேறி சென்னையில இருந்திருக்கிறான். அடுத்த ரெண்டு வருஷம் கழிச்சு களவாய்க் கனடாவிற்குப் போய்த் திரும்ப ஒரு மாத லீவில இப்ப சென்னைக்கு வந்திருக்கிறான். இன்னும் பத்து நாளில கலியாணம். இது இவனுக்கு இரண்டாவது கலியாணம்தான். முதல் மனிசியும் பிள்ளையும் முள்ளிவாய்க்காலில செத்துப்போயிட்டினம். இந்தக் கதையை நான் முடித்துக்கொள்ள சரியாக ஏழரை நிமிடங்கள் ஆகும். கதை நிகழத் தொடங்கிற்று. பத்து நாள்களில் கலியாணப் பந்தலில் மாப்பிளை வேஷத்தோடு இருக்கப்போகிற இவன் சிறைச்சாலையில்தான் எனக்கு அறிமுகமானான். சிறிய குற்றங்களுக்கான குற்றவாளிகளை அடைக்கும் புலிகளின் சிறைச்சாலையில் தண்ணீருக்குக் கஷ்டம் இருந்தது. இவனுக்கு அதிகமாக வியர்ப்பதோடு அடிக்கடி மூத்திரம் போகும் பழக்கத்தையும் கொண்டிருந்ததால், மிகவும் துன்பப்பட்டான். இருண்ட நிலக்கீழ் அறையில் தன்னை அடைத்துவைக்கப் போகிறார்கள் என அஞ்சி சில வேளைகளில் அழவும் செய்தான். குற்றங்களை ஒப்புக்கொண்டுவிட்டால் அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்று சக குற்றவாளி சொன்னபோது இவன் மனஆறுதல் அடைந்தான். அடுத்த விசாரணையில் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் எனத் தனக்குத் தானே சத்தியம் செய்தான். தண்ணீரில்லை என்று கூண்டறைக்குள் இருந்து கேட்டபோது, குற்றவாளிகள் தண்ணீரைக் குடிக்கக் கூடாது எனப் பதில் சொல்லப்பட்டது. “நான் குற்றவாளியே இல்லை, நீங்கள் யாரென்று கண்டுபிடிக்க முடியாத வறுமையில் என்னைப் பிடித்து அடைத்திருக்கிறீர்கள்” என்று கத்தினான். எங்கிருந்து நீண்டதென்று தெரியாமல் இவனின் முதுகைப் பனைமட்டையின் கருக்கு அறுத்தது. இவன் அழவில்லை. “இந்தப் பாவங்கள் உங்களைச் சும்மா விடாது” என மீண்டும் குரலெடுத்துக் கத்தினான். சக குற்றவாளிகள் இவனின் வாயைப் பொத்தினார்கள். அவன் மீண்டும் தண்ணீர் என்று கேட்டதும், அதே பதில் கிடைத்தது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick