வரலாற்றுப் புகழ்மிக்க உடும்பு - மௌனன் யாத்ரிகா

ஓவியம் : செந்தில்

முரட்டுக்கொடிகள் சுற்றிக்கொண்ட
காய்ந்த மரத்துண்டைப்போல்
உறுதியான வால்
நீலப்பறவை பதுங்கும் வங்கில்
நுழைவதைப் பார்த்தேன்

“பச்சைக்காடுகள் விதைக்கப்பட்ட உடும்பின் கண்களை
அது எட்டிப்பார்க்கும்போது காண வேண்டும்
அகவன் மகனே!
உன் உண்டி வில்லைச் சுருட்டி வை”

“எலே மலைராசா...
நாட்டுக்குள் போய் வந்த காட்டாளா
முட்டைகள் நொறுங்கும் சத்தம் கேட்கிறது பார்
இந்நேரம் அதன் பிளந்த நாவின் நுனியில்
பச்சை அண்டத்தின் ருசி வழியும்
இன்று நம் அட்டிலில்
கூடுதல் மிளகை அரைப்பாள் நம் கிழத்தி”

“எச்சிலூறும் அந்த நத்தையை
ஓட்டுக்குள் கொஞ்சம் இழுக்கிறாயா?
காட்டின் சகல இடங்களுக்கும் போகும்
ஒரு முதிர்ந்த விலங்கின் கண்களில்
நமக்கு முந்தைய தலைமுறையின்
பாதத் தடங்கள் நிச்சயம் இருக்கும்
எனக்கதைக் காட்டு சிறுமலை நாடா”

“என் ஈட்டியின் கூர்முனையால்
அதன் கழுத்துச் சதை அறுந்தால் 
இரண்டு கண்களையும் பிடுங்கி
உன்னிடம் தந்துவிடுகிறேன்
அதற்குள் ஆயிரம் தடங்களாவது இருக்கும்”

“இறந்த கண்கள் வேண்டாம்
உயிருடன் பிடிப்போம்
இந்தக் காட்டில் நம் வரலாறு மறைந்துள்ளது
முந்நூறாண்டுகள் வாழ்ந்த ஓர் உடும்புக்கு
நம் சரித்திரம் தெரியும்

சரித்திரத்தைத் தெரிந்துகொள் எந்தையே
உன் ஈட்டியைப் பிடுங்கிக்கொண்டு
ஜல்லி அள்ளும் கருவியை
உனக்குக் கொடுக்கப்போகிறார்கள்”

வரலாற்றுப் புகழ் மிக்க உடும்பு
அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick