பருவமழை போலப் பெய்கிறது கண்ணீர்! - அய்யப்பமாதவன்

ஓவியம் : வேல்

மாலையில் மெள்ளச் சாய்கிறது பகல் நிலம்
எப்போதும்போலவே எல்லாமும்
இருப்பதுபோலவே இருக்கிறது
மடியாத உயிர் உவகையில் திளைக்கிறது
பாடிடும் குயில்கள் இசைக்கின்றன கவிதைகள்
விடிந்து இருளும் பொழுதுகளுக்குள்
துயருரும் குரல்கள்
ஊடுருவும் மனம் கண்ணீர் உகுக்கிறது
அந்தியின் மிளிர்வில்
தங்கநகை பூட்டிய இளம்பெண்போல
வெட்கிய பூமியில் கோடையும்
பெருகிய வறட்சியும் ஒருபுறம்
நசுக்கும் அதிகாரம் வந்துகொண்டிருக்கும்
அடரிருளைப்போல பயமுறுத்துகிறது
வீட்டைப் பறிக்கிறார்கள்
வயல்வெளிகளைப் பறிக்கிறார்கள்
காட்டைப் பறிக்கிறார்கள்
மலையை உடைக்கிறார்கள்
இயலாதவனின் கண்ணீர்
பொய்க்காதப் பருவமழைபோல
பலமாய்ப் பெய்கிறது
சமர் புரியும் மானுடம் சாமத்தின் இருளுக்குள்
கொடிய பூதங்களால் பூட்டப்படுகிறது
பசுமையை அழிக்கும் எதுவும் வந்தே தீரும்
என்ற தீர்மானம் துர்க்கனவாய்ப் பின்னிரவில்
பீதியூட்டி எழவைக்கிறது
விடியலைக் காணாத சமூகத்தில்
பதுக்கப்பட்டிருக்கிறது ஒளி
அதோ அங்கேயே இருக்கிறது புலர்காலை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick