ஒரு காதல் முற்றத்தில் நின்று கொண்டிருக்கலாம் - யவனிகா ஸ்ரீராம் | Tamil Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

ஒரு காதல் முற்றத்தில் நின்று கொண்டிருக்கலாம் - யவனிகா ஸ்ரீராம்

ஓவியம் : ரமணன்

துள்ளி வந்து விழுந்தது
ஓர் ஆழ்கடல் மீன் முற்றத்தில்
மட்டையரிசியின் பதத்திற்கு
அதைக் குழம்பாக்கலாம்
செம்படவர்களின் ஓலைமண் வீட்டின் முன்பு திரியும்
நாய்கள் தவறும் ஓரிரு மீன்களுக்காகவே
கரைமணலில் ஆயுட்காலம் மரித்துப்போகின்றன
கடற்காற்று என் சாளரங்களைத் தொடுவதில்லை
மாறாக அலைகளை ஒரு துறவிக்கும்
மௌனங்களை மனிதர்களின் ஏழேழு பிறவிக்கும் விரித்துப் பாடுகிறது
கரையில் நிர்வாணமாகும் முன்னிரவோ
என் முற்றத்துப் பூனை
மூன்று பக்கத்து நிலத்தில் விழுந்தும் மீன் வயிற்றில்
மணல் வெளி இல்லை
எனக்கோ நிலவெரியும் முற்றம் விட்டுச் செல்லும் வழியெல்லாம் ஒரு பங்கு நிலம்
கடல் உதறிய மீனைப்போலத்தான் மணல் உதறும் உடல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick