தனித்து நிற்கும் சாதனை - கோவேறு கழுதைகள் 25 | 25 years of Koveru Kaluthaigal - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

தனித்து நிற்கும் சாதனை - கோவேறு கழுதைகள் 25

ருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இமயத்தின் ‘கோவேறு கழுதைகள்’ நாவலைப் படிக்கும்போது, ஒரு விஷயம் பளிச்சென்று புலப்படுகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகும் நாவல் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதுதான் அது.

நாவல் வெளிவந்த காலத்தில் இதுபோல இன்னொரு நாவல் இல்லை என்று கூறப்பட்டது. மூத்த எழுத்தாளரும் இலக்கியப் பிரதிகள் குறித்த கூர்மையான விமர்சனங்களை முன்வைத்தவருமான சுந்தர ராமசாமி, இந்த நாவலை  ‘முன்னுதாரணமற்ற நாவல்’ எனக் குறிப்பிட்டார். அன்று, பெரும் விவாதத்துக்கும் எதிர்ப்புக்கும் உள்ளான அந்தக் கூற்று, 25 ஆண்டுகளுக்குப் பின்னாலும் உயிர்ப்புடன் இருக்கிறது. இந்தக் கூற்றுக்கு எதிரான விமர்சனங்கள் இன்று தம் மதிப்பை இழந்துவிட்டன.

விளிம்பு நிலை மக்களின், ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வைச் சொன்ன படைப்புகள் பல, கோவேறு கழுதைகள் எழுதப்படுவதற்கு முன்பும் பின்பும் வந்திருக்கின்றன. 90-களில் பெரும் உத்வேகத்துடன் உருவாகிவந்த தலித் இலக்கியப் போக்கு இதுபோன்ற படைப்புகளைத் தந்திருக்கிறது. அதற்கு முன்பும் பலர் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வை எழுதியிருக்கிறார்கள். இத்தகைய எழுத்துகளிலிருந்து இமையத்தின் கோவேறு கழுதைகள், எப்படி வேறுபடுகிறது?

விளிம்பு நிலை மக்கள், ஒடுக்கப்பட்டோர் வாழ்வைச் சொல்வதில் இரண்டு விதங்கள் உள்ளன. ஒன்று அவர்களை உள்ளிருந்து பார்க்கும் கோணத்தில் எழுதுவது. நேரடி அனுபவம், மிக நெருக்கமாக வாழ்ந்ததில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், வாழ்வைப் பதிவுசெய்வது. இன்னொன்று, வெளியிலிருந்து பார்த்து, தகவல்களைத் திரட்டி, தொகுத்து எழுதும் கோணம்.