அடுத்து என்ன? - கண்மணி குணசேகரன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பேரழகி வந்துவிடுவாள்கண்மணி குணசேகரன் படங்கள் : தே.சிலம்பரசன்

நான் எப்போதுமே கவிதை எழுதிக்கொண்டிருந்தால் கவிதை. கதை எழுதிக்கொண்டிருந்தால் கதை. அதுபோலவே நாவல், அகராதி என ஒரு படைப்பு அல்லது ஒரு தொகுப்பு முயற்சியில் இருக்கும்போது, ஒன்றை முடித்து விட்டுத்தான் அடுத்ததை ஆரம்பிப்பேன். இந்த மாதிரி கறாரான ஒரு கட்டுப்பாட்டில் எனது எழுத்துப் பணிகளை வைத்துக்கொண்டிருந்ததால்தான் பணிமனை, கொல்லைவெளி, முந்திரி, குடும்பம் என எல்லா திக்குகளுக்கும் என்னால் இடறில்லாமல் ஓட முடிந்தது; ஓடிக்கொண்டும் இருக்கிறேன். இந்த முறையான பணிச் சுழற்சியில், முன்னர் எப்போதும் இல்லாதபடி இப்போது சிக்கல் நேர்ந்துவிட்டது. மெய்தான். தற்போது முடிந்திருக்கும் எனது `நடுநாட்டுச் சொல்லகராதி’யின் இரண்டாம் பதிப்புதான் இந்தக் குளறுபடி வேலையைச் செய்துவிட்டது. இல்லையென்றால், போன ஆண்டு நான் முடிவெடுத்ததன்படி, டிசம்பர் 2017-ல் எனது `பேரழகி’ நாவல் வெளிவந்திருக்கும்.

`நடுநாட்டுச் சொல்லகராதி’யின் மீள்பதிப்புக்காகச் சொற்களை ராப்பகலாகச் சேர்த்து அலுத்த ஒரு கட்டத்தில், சேர்த்தவரை அகரவரிசைப்படுத்தி அச்சுக்கு (பி.கி.ராம்குமார், மதுரை) அனுப்பி, சீலைப்பேன் பொறுக்குகிற மாதிரி மெய்ப்புத் திருத்தமும் பார்த்து, மீண்டும் அனுப்பிவைத்துவிட்டு `அப்பாடா… இனிமேல் எந்தச் சிக்கலும் இல்லாம `பேரழகி’ வேலையைப் பார்க்கலாம்’ என ஆரம்பித்திருந்தேன். பத்து இருபது பக்கங்களுக்கு மேல் கிடுகிடுவென எழுதியும்விட்டேன். எழுத்தின் ஊடே திடுமென ஒருநாள் `காதுக்கட்டை’ (காதுக்கட்டை - தெருக்கூத்தில் ஆண் வேடக்காரர்கள் காது மடலை மறைத்து அணியக்கூடிய ஓர் அணிகலன்) என்ற ஒரு சொல் ஞாபகத்துக்கு வந்தது. கூடவே `மதத்துக்கு மருந்தைத் தின்னுட்டு பத்தியத்துக்கு வெயில்ல காஞ்சாளாம்’ பழமொழி, `கெடந்த கழியை எடுத்து, நின்ன மாட்ட ஓட்டின கதையா’ மரபுத்தொடர் என வரிசைக்கட்டி நாவல் எழுதுவதை மறித்துக்கொண்டு நின்றன. அவ்வளவுதான், ‘பேரழகி’யை நின்ற இடத்தில் அப்படியே போட்டுவிட்டு, புதுவெள்ளம் கண்ட கெண்டைக்குஞ்சு மாதிரி மனம் சொற்சேகரத்தில் இறங்கி அகராதிப் பணிக்குத் தாவினேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick