"புத்தகங்கள் தனக்கான வாசகனைத் தேடிவரும்!” - மகுடேசுவரன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள் : ரமேஷ் கந்தசாமி

வீனத் தொழில்நுட்பம் தமிழக வாழ்வுக்குள் மிகத் தீவிரமாக நுழைந்துள்ள சூழலில், பிறமொழிப் பயன்பாட்டுச் சொற்களைத் தமிழ்ப்படுத்தி தமிழ்க் கலைச்சொல் வளத்தைக் கூடுதல் பலப்படுத்தி வருபவர் கவிஞர் மகுடேசுவரன். ‘விகடன் தடம்’ இதழுக்காக அவரது வாசிப்பு, புத்தகச் சேகரிப்புகள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

“விகடன் தடம் இதழின் இந்தப் பகுதியில் எனக்கு முன்பாகப் பேசியவர்களில் பெரும்பாலானோர் குறிப்பிட்டிருந்ததைப்போல நானும் என் தொடக்கக் கால வாசிப்பை ‘பாலமித்ரா’, ‘அம்புலிமாமா’விலிருந்துதான் தொடங்கினேன். எப்படியோ என் கைக்கு வந்த ஒரு பொட்டலமாக மடிக்கப்பட்ட காகிதத்திலிருந்த கதையைத் திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டிருந்தேன். இதைக் கவனித்த என் அப்பா, உடனே கடைக்குப் போய் ‘பாலமித்ரா’, ‘அம்புலிமாமா’ ஆகிய புத்தகங்களை வாங்கி வந்து கொடுத்தார். அப்போது கிராமத்தில் வசித்து வந்தோம். எனவே, மாதம் ஒருமுறை மட்டும்தான் புத்தகங்கள் புதிதாகக் கிடைக்கும்.

எனவே, ஒருமுறை வாங்கிக்கொடுக்கப்படும் புத்தகத்தைத்தான் மாதம் முழுவதும் திரும்பத் திரும்ப படித்து வருவேன். இப்படியான நிலையில் ஆறாம் வகுப்பில் திருப்பூரில் உள்ள உயர் நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டேன். அதுதான் மிகப் பெரிய நன்மையைச் செய்தது. அதாவது பள்ளிக்கு அருகிலேயே நகர நூலகம் இருந்தது. தற்போது அதுதான் மாவட்ட நூலகம். அங்குதான் வரலாறு, வாழ்க்கை வரலாறு என்று புதிய உலகங்களைக் காட்டிய நூல்களைச் சந்தித்தேன். வாசிப்பைச் சாத்தியப்படுத்தியது என் பள்ளிதான். நந்தகோபால மேல்நிலைப் பள்ளி. அங்கிருந்த ஆசிரியர்கள் பாடப்புத்தகத்தைத் தாண்டி அறிவுசார் புத்தகங்களை வாசிக்க மிகவும் ஊக்கப்படுத்தினார்கள். இன்றைக்கு அப்படி ஒரு சூழலை எங்கும் காண முடியவில்லை. புத்தக வாசிப்பு ஆர்வம் என்பது இயற்கையாகவே எனக்குள் இருந்துள்ளது. அந்த ஆர்வத்தைக் கண்டுகொண்ட என் தந்தை அதை ஊக்குவித்தார்.

வெறும் 800 ரூபாய் சம்பளம் வாங்கியபோதே 1,000 ரூபாய்க்குப் புத்தகம் வாங்குவேன். புத்தகங்களின் மீது அவ்வளவு ஆர்வம் இருந்தது. இன்றைக்கு புத்தகங்களை வாங்குவது இலகுவான விஷயம். ஆனால், அன்றைய நிலைமை அப்படி இருக்கவில்லை. வார இதழான ‘மாலைமதி’யை தெருவில் ஒருவர் வாங்கினால், அதைக் குறைந்தது 30 பேராவது படிப்பார்கள். கவிஞர் புவியரசு குறிப்பிடுவார் ‘நாங்கள் அச்சடித்த வானம்பாடி இதழ்கள் குறைவுதான். ஆனால், அதைப் படித்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஒரு புத்தகத்தையே 500 பேர் படித்ததெல்லாம் எனக்குத் தெரியும்’. புத்தகம் எப்போதும் தேங்குவதாக இருக்கக் கூடாது. அப்படி நூலகத்தின் பெயரால், சேகரத்தின் பெயரால் தேங்கும் புத்தகங்கள் மீண்டும் மீண்டும் பலரால் வாசிக்கப்பட வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick