காலத்தின் களிம்பேறா கதைகள் - ரவிசுப்பிரமணியன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

“என்னால் எப்படி எழுத்தாளனாக முடிந்தது என்ற கேள்விக்கு, என்னிடம் பதில் இல்லை. எங்கள் குடும்பத்தில் படித்தவர்கள் யாருமில்லை. நண்பர்கள் கரிச்சான் குஞ்சு, தி.ஜானகிராமன் போன்றவர்களின் பெற்றோர்கள் படித்தவர்கள். கரிச்சான் குஞ்சுவின் தாயார் அழகாகப் பாடுவார். எனக்கு அப்படி ஒரு சூழல் இல்லை. எங்கள் குடும்பத்தில் எல்லோரும் உழைப்பாளிகள்; நெசவாளர்கள். என் தந்தையும்கூட நெசவாளர்தான். நான் எழுத்தாளனாக ஆனது விதி. பல பிறவிகளில் செய்த தீவினைகளின் பயனாகத்தான், நான் தமிழ் எழுத்தாளன் ஆனேன் என்று நம்புகிறேன்” என்று சொல்வார் எம்.வி.வெங்கட்ராமன்.

 1920-ல், கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்தவர் எம்.வி.வி. வீரய்யர் - சீதையம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்து, மிகச்சிறு வயதிலேயே தாய்மாமன் தம்பதியர் மைசூரு வெங்கடாசலபதி – சரஸ்வதி ஆகியோருக்குத் தத்துப் பிள்ளையாகச் சென்றவர்.

வசதியான குடும்பம். எம்.எம்வி-யின் அப்பாவுக்கு தெய்வபக்தி அதிகம். பிறருக்கு உதவி செய்வதில் முனைந்து நிற்பவர். அவருக்கு ஒரு பழக்கம் இருந்துள்ளது. தனது பட்டு ஜவுளிக் கடையை மூடுவதற்கு முன்னால், தினமும் ஏதாவது ஒரு கதையைப் படிக்கச் சொல்லிக் கேட்பாராம். அதன் பின்புதான், கடையை மூடிவிட்டு, தூங்கச் செல்வாராம். சின்ன வயதிலிருந்து இப்படிப் பல புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்திருக்கிறார் எம்.வி.வி. தவிர, வாராவாரம் சனிக்கிழமை, அவர் வீட்டில் பஜனைக் கச்சேரி நடந்துள்ளது. “அந்தக் கேள்வி ஞானம், நான் எழுத வருவதற்கு உந்துதலாக இருந்திருக்கும்” என்பார்
எம்.வி.வி.

 அவரது இளம் வயதில் வாசிக்க, புத்தகங்கள் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. ‘கலைமகள்’, ‘ஆனந்த விகடன்’ போன்ற பத்திரிகைகள் மட்டுமே கிடைத்துள்ளன. அவற்றை அவர் தொடர்ந்து வாசித்து வந்துள்ளார். தவிர, ஆரணி குப்புசாமி முதலியார், ஜே.ஆர்.ரங்கராஜீ, வடுவூர் துரைசாமி அய்யங்கார் போன்றவர்கள் எழுதிய பல நாவல்களை  வாசித்துள்ளார். இவற்றையெல்லாம் படித்த 13 வயது எம்.எம்.வி-க்கு, ‘நாமும் ஏன் எழுத்தாளனாகக் கூடாது’ என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick