மீன் முள்ளின் இரவு - பா.திருச்செந்தாழை | Short Story - Vikatan Thadam | விகடன் தடம்

மீன் முள்ளின் இரவு - பா.திருச்செந்தாழை

ஓவியம் : ரமணன்

புறநகர்ப் பகுதியின் கடைசி வீட்டில் வசிப்பவன் நான். என் வீட்டையடுத்து விரியும் புதர்மண்டிய நிலக்காட்சியையும், கைவிடப்பட்ட தூரத்துக் குவாரியின் தனிமையையும் ரசிப்பதற்கென்றே கடைசி வீட்டுக்காரனானேன். நகரங்கள் மென்று துப்பும் எச்சங்களின் மீது அருவருப்படைந்து மரங்கள் நடந்து விலகிச் செல்வதையும், துர்கனவின் வரைபடம்போல நகரின் சித்திரத்தை அஞ்சியபடி எளிய பறவைகள் தத்தி ஓடுவதையும், வழியின்றி பார்த்தபடியிருக்கும் கடைசி வீட்டுக்காரர்களின் முகத்தில், புத்தனின் மிகவும் தேய்ந்த நிழலை அவ்வப்போது காண முடியும்.

மேலும், இங்கே பன்றி வேட்டைக்குப் பழக்கப்படுத்தப்பட்ட வேட்டை நாய்களை, பருவங்கள் தீர்ந்து கிழடான பின் அவிழ்த்து விட்டுவிடுவார்கள். மெலியத்தொடங்கிய அந்நாய்களின் வேட்டைத் தகுதியான கூர் பற்களில் துருப்பிடிக்கத் தொடங்கும் நாள்களில், அவை ஒரு வாய் பால்ச்சோறு வேண்டி எல்லா வீடுகளின் வாசலிலும் தவங்கிக் கிடக்கின்றன. அப்போதெல்லாம் அவற்றின் கோலிக்குண்டு கண்களில் வன்மம் ஒளிரும். அந்தப் பிச்சைச் சோற்றை அவை வெறுக்கின்றன. அதற்காக ஏங்கி நெளியும் தங்கள் குடல்களின் மீது வெறிகொள்கின்றன. ஒரு கட்டத்தில் வாலைக் கடித்து பின்னுடம்பை விழுங்குவதற்கான ஆவேசமெழ உடலை வட்டமாய் மடித்து ஒரே இடத்தில் சுழல்கின்றன. வேட்டைக் காலத்தில் அடிபட்டுப் புண்ணாகிப்போன காயத்தடங்களை அவை நக்கும்போது, அழுகலின் உன்னத வீச்சத்தை நீர் ததும்பும் கண்களில் வெளிப்படுத்துகின்றன. நான் என் மனைவியிடம் வேட்டை நாய்கள்மீது கவனமாயிரு என்று மட்டும் கூறியிருந்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick