நத்தையின் பாதை - 8 - நிலைப்பதும் கலைப்பதும் ஆனது - ஜெயமோகன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

முப்பதாண்டுகளுக்கு முன்பு, புத்தகத்துடன் கிளம்பி முற்றிலும் அறியாத ஏதேனும் ஊருக்குச் சென்று, அங்கே சில நாள்கள் தங்கி, அந்நூலை வாசித்து முடிக்கும் வழக்கம் எனக்கிருந்தது. மிகச்சிறந்த ஒரு முறை இது. கிளம்பிச் செல்லும் வாய்ப்புள்ள இளம் நண்பர்கள் இப்படிச் செய்து பார்க்கலாம். நாம் செல்லுமிடம், அந்நூலுக்குரிய மனநிலையை உருவாக்கும் சூழலாக இருக்க வேண்டும். அதைத் தேர்ந்தெடுப்பது அந்நூலைச் சார்ந்த நம்முடைய புரிதலும் உள்ளுணர்வுமாக இருக்க வேண்டும். யோசித்துப் பாருங்கள், குஜராத்தின் தொழில்முறைத் திருடர்களின் வாழ்க்கையைச் சொல்லும் ‘சோரட் உனது பெருகும் வெள்ளம்’ (ஜாவேர்சந்த் மேகானி) நாவலை, குஜராத்தின் கட்ச் பகுதியின் அரைப்பாலைநிலத்தில் மொட்டைமலைகள் சூழ அமர்ந்து வாசித்தால் எப்படி இருக்கும்?

நம் நூல் வாசிப்பைத் தடுப்பது, நாம் அன்றாடம் புழங்கும் சூழல். அதில் நாம் கொள்ளும் சிறிய ஈடுபாடுகள், தொல்லைகள். அதைவிட நம் உள்ளம் அங்கிருக்கையில் ஓர் அன்றாட மனநிலையில் இருக்கிறது. பயணத்திற்கு எனக் கிளம்பியதுமே நம்மில் அன்றாட உலகவாழ்வின் சலிப்பு அகன்று உள்ளம் கூர்மைகொண்டுவிடுகிறது. அப்போது, ஒரு நூல் முழுவிசையுடன் நம்முள் நுழையும்.  நாம் அன்றாடம் வாழும் சூழலில் எப்பொருளையும் கூர்ந்து நோக்குவதில்லை. எவையும் பயன்பாடு சார்ந்த வழக்கமான அர்த்தத்துக்கு அப்பால் அளிப்பதுமில்லை. பயணங்களில் அனைத்தும் குறியீடுகளாக ஆகின்றன. நம் உள்ளம் அவற்றை விதவிதமாக அடுக்கியும் கலைத்தும் அவை குறித்து நிற்கும் வேறு சிலவற்றையும் அறியத் தொடங்குகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick