சீட்டா கை சிவாஜி - வடசென்னை வாழ்வும் மொழியும் - பாக்கியம் சங்கர்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம் : பிரேம் டாவின்ஸி

‘சீமென்’ சண்முகம் கட்டையான உருவம்கொண்டவர். தனது எல்லா பாடுகளையும் ஒரு சிரிப்பில் கடந்துவிடுபவர்.  நடிகர் திலகத்தின் தீவிர வெறியர். ‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே... நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே’ என்று குழந்தைகளைத் தூக்கி சிவாஜியாகவே கொஞ்சி அழிச்சாட்டியம் செய்பவர். சரக்கடித்துவிட்டால் போதும், ‘வசந்த மாளிகை’ சிவாஜிபோல, மன்மத அம்புகளைப் பெண்களின் மீது சரமாரியாக ஏவிக்கொண்டிருப்பார். ‘மதன மாளிகையில்... மந்திர மாலைகளாம்...’ தண்ணீர்க் குடத்தைச் சுமந்து செல்லும் அன்னக்கிளியின் இடுப்பைக் கிள்ளிக் கண்ணடிப்பார் சிவாஜி. (பேட்டையில் அவரை நாங்கள் சிவாஜி என்றே அழைப்பதால், இங்கேயும் சிவாஜியை சிவாஜியாகவே நாம் உருவகித்துக்கொள்ளலாம்). ‘இன்னா பெர்சே எட்த்துப் போட்டுக்கினு அடிக்குதா... வயசாகியும் அடங்குறியா... இரு இரு... உன்ன வெச்சிக்கறேன்’’ சிவாஜியின் மீது குடத்துத் தண்ணீரைத் தெளித்து ஒரு பொய்க்கோபத்தைக் காட்டுவாள். “அடிங்... சக்கன்னானா... உன் வாயாலயே வெச்சிக்கிறன்ட்டல... அப்போ மஸ்த்த ஏத்திர வேண்டியதுதான்...” -சிவாஜி உதட்டைச் சுழித்து, ‘தனது வெட்கத்தைக் காட்டுகிறேன் பேர்வழி’ என்று தனது சுண்டு விரலில் இல்லாத நகத்தைக் கடித்துக்கொண்டிருப்பார். அன்னக்கிளி சிரித்தபடியே நகர்ந்துவிடுவாள்.

பேட்டையில் புறா பந்தயம் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு கலாசார நிகழ்வு. தன் குழந்தையைக் கவனிக்கிறார்களோ இல்லையோ, புறாவைத் தனது நெஞ்சாங்கூட்டில் வைத்துப் பொத்திக் கொண்டிருப்பார்கள். புறா ரேஸ் தேதியை அறிவித்துவிட்டால் போதும், ஒரு நாடோடியாகப் புறாவுடன் லயித்துக் கிடப்பார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick