கொதித்து அடங்கிய உள்ளம் கு.ப.ரா. - சு.வேணுகோபால்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியங்கள் : பிரேம் டாவின்ஸி, மணிவண்ணன்

`இலக்கிய இரட்டையர்கள்’ என அறியப்படும் ந.பிச்சமூர்த்தியும் கு.ப.ராஜகோபாலனும் தொடக்க கால தமிழ்ச் சிறுகதைகளுக்கு வலுவான அடித்தளத்தை உண்டாக்கியிருக்கின்றனர். கதையை எப்படி நேர்த்தியாகச் சொல்வது என்ற வடிவப் பிரக்ஞை இருவருக்கும் உண்டு. இவர்களின் வடிவார்த்தம், பிறகு எழுதவந்த தலைமுறையினருக்குச் சிறுகதை இலக்கியத்தை இன்னும் வளமுள்ளதாக மாற்ற உதவியது. இருவரின் கதைகளும் வெவ்வேறு தளங்களில் இயங்குபவை. ந.பி., தனது கதைத்தளத்தை அதிகமும் புற உலகப் பிரச்னையிலிருந்து உருவாக்கியிருக்கிறார். கு.ப.ரா., தனது கதை உலகத்தை அதிகமும் அக உலகப் பிரச்னையிலிருந்து உருவாக்கியிருக்கிறார். இப்படி புறமும் அகமுமாக இவர்களின் கதை உலகங்கள் விரிகின்றன.

கு.ப.ரா-வின் அதிகம் பேசப்படாத எளிய கதைகளில்கூட வாழ்க்கை சார்ந்த அனுபவத்தை மிகச் சரியாக உண்டாக்கிவிடுகிறார். பிரச்னையின் மையப்புள்ளியை வெகு இயல்பாக இனம்கண்டு, மோதல் எப்படிக் கிளைவிட்டுச் செல்கிறது என்பதை, தோய்ந்த கலாசார அனுபவத்திலிருந்து உண்டாக்கிவிடுகிறார். அந்தப் பிரச்னையின் மையம் எளிமையானது; மென்மையானது. ந.பி., புற உலகப் பின்னணியிலிருந்து மனித மன ஊடாட்டங்களைக் கதையின் பிரச்னைகளோடு இயல்பாகப் பிணைக்கிறார். கு.ப.ரா., மானிட உள்ளத்தின் விசித்திரங்களை, மோதல்களை ஆதாரமாகக்கொண்டு மனிதர்களைப் பின்தொடர்கிறார். மனிதர்களிடம் வெளிப்படும் அக உண்மைகளை வெளிப்படுத்திக்கொண்டு செல்லும்போது, வாசகன் தான் சார்ந்த அனுபவத்தைக் கதையில் நெருக்கமாக உணர்கிறான். பிரச்னையின் உச்சம்வரை நம்பகத்தன்மையைச் சரியாக வெளிப்படுத்திவிட்டு, முடிவு சார்ந்து திரும்பும்போது, அதற்கு நல்ல தீர்வு ஒன்று தர வேண்டும் என விரும்புகிறார் கு.ப.ரா. வாழ்க்கைமீது கொள்ளும் பற்று சார்ந்தது இந்த விருப்பம். வாழ்க்கை அதன் நேர்நிலையில் காணும் கசப்புக்கு மாறாகவும் இருக்கிறது. ஒருவகையில் கு.ப.ரா-வின் விருப்ப நிறைவேற்றம்போலவே சில கதைகள் அமைந்துவிடுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick