ஓர் இரவு ஒரு பகல் ஒரு வீடு - வேல் கண்ணன் | Poetry | விகடன் தடம்

ஓர் இரவு ஒரு பகல் ஒரு வீடு - வேல் கண்ணன்

ரவு உதிர்ந்துகொண்டிருந்தது.
நிலமிழந்தவர்களின் முகாமிலிருந்த
இறந்தவர்களைச் சுமந்து செல்லும் வாகனமொன்றில்
நட்சத்திரங்கள் குவித்துவைக்கப்பட்டிருந்தன
அதில் எண் வரிசையைப் பதித்துக்கொண்டிருந்தார்
XXX இலச்சினை தரித்த அதிகாரி
அனைவருக்குமான வானத்தை அகற்றுவதே அவருக்கு இடப்பட்ட கட்டளை
நிலவை மறைக்க அவர் குழந்தைகளைப் பாடக் கட்டளையிட்டு இருந்தார்
ஆணவத்தின் பிடியுண்ட சொற்களை அறியாத குழந்தைகள்
பாடுங்கள் என்றவுடனே நடனமிட்டுப் பாடத் தொடங்கிவிட்டார்கள்
நிலவற்ற பறவைகள் மறையத் தொடங்கின
அவரால் ஒரு நாளும் முழு இரவைச் சேகரிக்க முடியவில்லை
பகல் கரையத் தொடங்குகிறது
செயற்கைக் கருமுட்டை தயாரிக்கும் நிறுவனத்தின்
குளிர்ப்பெட்டி இணைக்கப்பட்ட கண்ணாடிக் குடுவையில்
வெயிலை அள்ளிக்கொண்டிருந்தார்கள்
பரப்பிக்கிடந்த வெக்கையை நெகிழியால் வழித்துக்கொண்டிருந்தார்
XXY இலச்சினை தரித்த அதிகாரி,
அனைவருக்குமான நிலத்தைச் சுருட்டிக்கொள்வதே அவருக்கு இடப்பட்ட கட்டளை
இலை உதிர்த்த மரங்கள்
அணுக்கழிவால் கரையொதுங்கிய
மீனின் கண்களாய் வெறித்துக்கொண்டிருந்தன.
அவரால் எந்நாளும் ஒரு பகலைச் சேகரிக்க முடியவில்லை.

புத்தனின் விரல்நுனிக் கதிரொளியால் மினுக்குகிறது
மண்டிக்கிடந்த இருள் உதிரும் நள்ளிரவு

ஆதித்தாய் கூரையற்ற ஒரு வீட்டினை நெய்துகொண்டிருக்கிறார்
அரூபக் காலக்காட்சிகள் சிதிலமின்றி நீரோவியங்களாய்
ஒப்புக்கொடுத்துவிட்டு கடலலைகள் திருப்பிச் செல்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick