செல்வி ராமச்சந்திரன் கவிதைகள் | Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

செல்வி ராமச்சந்திரன் கவிதைகள்

ஓவியம் : மணிவண்ணன்

இன்று என் பெயர் ஆரஞ்சு ட்ரீ

ன் அலைபேசியில்
தினமும் ஒரு பெயர் எனக்கு
இன்று ஆரஞ்சு ட்ரீ
நேற்று நான் ப்ளூ ரோஸ்
அதற்கு முந்தைய நாள் பர்ப்பிள் பேரட்
இதுவரை பதினேழு பெயராக
உனது அலைபேசியில் மாறியிருக்கிறேன்
ஒரு சிறிய வீட்டில்
பெரிய பொருளை
ஒளித்துவைப்பதுபோல் இருக்கிறது ஒரு பெயரை
ஒளித்துவைப்பது
வங்கிக் கணக்கின் கடவுச்சொல் மாற்றத்தைவிட
மிகவும் கடினமாக இருக்கிறது
இந்தப் பெயர் மாற்றம்
சில சமயம் அந்தப் பெயர் யாருடையது என்றும் தடுமாறுகிறாய்
நான் உனக்கு யார் என்று தடுமாறுவதுபோலவே

தினமும் அதிகாலையில்
எனக்கு ஒரு புதிய பெயரிடுவது
என்னைப் புதிதாகப் பிறக்கச் செய்யும் தருணம் என்று நம்புகிறாய்
புதிய பெயரில் என்னை அழைக்கும்போது
புதிய பெண்ணோடு பேசுவதுபோலவே இருக்கிறது உனக்கு
புதிய பெயரில் எனது பெயர்
அலைபேசியில் ஒளிரும்போது
பழைய துயரங்கள் அழிந்துவிடுகின்றன

இந்தப் பெயர்தானே நாம்
இந்தப் பெயர்தானே நம் உடல்
இந்தப் பெயர்தானே நம் இதயத்தின் ரகசியம்
நம் வாழ்க்கையை நம்மால் மாற்ற முடியாது
ஆனால், நம் பெயர்களைச் சுலபமாக
மாற்றிவிடலாம்தானே
பெயர்களாலான உலகத்தில்
பெயர்களை மாற்றும்போது
இந்த உலகமும் மாறிவிடுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick