அரசுப் பள்ளி - சமயவேல் | Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

அரசுப் பள்ளி - சமயவேல்

ஓவியம் : ரமணன்

குப்பிலிருந்து வேகவேகமாக நடந்து
சேவுக் கடை முன் நிற்கிறேன்
பாக்கெட்டில் காசில்லை
மீண்டும் பள்ளிக்கே போகிறேன்
தார்ச் சாலையில் வேகவேகமாக நடக்கிறேன்
ஜின் ஃபாக்டரி ஆடிட்டிங்கில் தா.மணி இருப்பாரா?
ஒன்றுமில்லை வவுச்சரை வாசிக்க வாசிக்க
டிக் அடிக்க வேண்டும். ஆனால், அவர்
15 ஆண்டுகள் கழித்து வருவாராம்.
இப்பொழுது சவுண்டம்மன் கோவில் தெருவில் நடக்கிறேன்
தெரு முழுதும் பரவிய பாவுகளுக்குள் புகுந்து புகுந்து
நான் எதை நெய்தேன்?
நாட்டியப் பெண்ணின் குங்குமப் பட்டையா
பளீரெனத் தாக்கும் மஞ்சள் பட்டையா
பாந்தமா ஒரு நிறமும் தெரியாதோ?
நந்தவனக் கிணற்றுத் தெலாவில் சோலைமாயன் நிற்கிறான்
சிட்டை போடுவதைத் தவிர என்ன தெரியும்
சமரச சன்மார்க்க சபையின் வள்ளலாரை
வெள்ளைப் பளிங்காய் அவன்தானே துடைக்கிறான்
வரலாற்றில் 34 மார்க்
ஒரு மார்க்கிலும் பெயில் போடுவார் சேது சார்
பூதப்புரத்திலிருந்து காலை இழுத்து இழுத்து வருகிறாள் கலா
எல்லப்பன் ஊரில் எல்லோரது பல்லிலும்
செங்காவி போட்டிருக்கிறாள் எல்லம்மாள்
தம்பி கொஞ்சம் பொறுக்கியா
இட்லி வேகட்டுமே
நவநீதம்பிள்ளையின் கதர் வேஷ்டியில் பொடிக் கறைகள்
இருக்கட்டுமே
டேய் 25 பைசாவுக்கு ரெண்டு பூரிடா
ஸ்டார் டெய்லர் ட்ரவுசரைத் தைக்கவே மாட்டார்
உங்கப்பாவ வரச் சொல்லுலே
பொங்கலுக்கு தச்சதே இன்னும் தரல
பழைய சோறு
பாண்டியம்மாள் ஆமை வடை
அமிர்தம் அமிர்தம்
விஜயதேனு என்ன ஆனாள்?
சயின்ஸ் சார் செருப்பில்லாமல் நடந்தே போகிறார்
சபரிமலைக்கு
படுத்தாம்பட்டி சேகர் ஜூலையிலிருந்தே காணோம்
டிரில் மாஸ்டர் தினமும்
மூன்று பிரம்புகள் ஒடிக்கிறார்
எல்லாக் கேசும் அவர்தான பாக்கணும்
அவர் மனைவி மேத்ஸ் டீச்சர்
என்ன கணக்கோ என்ன பொருத்தமோ
நைன்த் வாண்டுகள் க்ரவுண்டிலா
நான் முட்டாள் அட்டையைப் பிடித்தபடி ஒருவன்
டென்த் பி யைச் சுற்றிக்கொண்டிருக்கிறான்.
ப்ளஸ் ஒன்
ப்ளஸ் டூ
எங்கே இருக்கு
மிக்சர் வண்டியில் ஜீரா போளி
கால் ரூபாய்க்கு நெய்ப் பூம்பருப்பு
தூக்குவாளி மூடியில் ஊறுகாய்
சென்ன கேசவன் கலெக்டர் ஆவான்
டிங் டிங் டிங் டிங் டிங்
பெல் அடிக்கும் பியூனுக்கேன்
இவ்வளவு ஆனந்தம்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick