காலம் - லாவண்யா சுந்தரராஜன்

ஓவியம்: வேல்

முன்னொரு பொழுதில்
இடைமெலிந்த
கண்ணாடிக் குடுவைகளினிடையே
மணலின் நெகிழ் வீழ்ச்சியாக
காலம் வழிந்தது.

பின்னர்,
எண்கள், கடிகார முட்கள்,
பெண்டுலங்களின் ஊடே
தத்தித் தத்தித் தாவும் நகர்வாக மாறி
இதயத் துடிப்பைப் பிரதி எடுக்கத் தொடங்கியது.

பின்பு அது
மின்மினியாக மின்னிக்க
நம்மிடம் பைனரி எண்கள் மட்டுமே மிஞ்சின
காலம் அளவையானது
அது ஒன்றாய் இருக்கும்
ஆனால், சுழியம்போல இல்லாமலும்.

காலம் இப்போது
ஒரு கணனிச்செயலி
நம்மிடம் இருப்பது செயல்
அல்லது செயலின்மை மட்டுமே.

ஆனாலும்,
நாம் எப்போதும்போல்
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே
நினைவிற்கும் மறதிக்கும் நடுவே
ஒரு கண திரைவிலகலாய்
மனபிறழ்சியாய்
வீழ்ச்சியாய்
துடிப்பாய்
சுழியமாய்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick