கவிதைகள் - கலாப்ரியா

ஓவியம்: கோ.ராமமூர்த்தி

தலை புதைந்த கவிதை

விதைக்கான வார்த்தைகளைக்
கோர்க்கத் தொடங்கியபோது
தம்மைச் சுற்றி வரையப்படலாம்
எனச் சில சித்திரங்களைக்
கற்பனை செய்தன வார்த்தைகள்
சோளக்கொல்லை பொம்மையின் நினைவு
சோர்வு தந்தாலும்
அக்காக் குருவி படிமம் கவிதைக்குள் வந்தால்
அமர்ந்துகொள்ள இருந்து தொலையட்டுமென
சமாதானமாயின
பாம்புகள் படங்களாகவோ வரிகளிலோ
குறியீடுகளாக வந்த
குற்றஉணர்வுக் காலங்கள் மலையேறிவிட்டதால்
பயமில்லை என ஆசுவாசம்கொண்டன
பாவைக்கூத்துச் சித்திரங்கள்
பாவைகளாகவே இருந்தால் பரவாயில்லை
வாய் திறந்தே சொல்லிக்கொண்டன
வரிசையில் நின்று கூட்டிசையாய்
கையெழுத்து மட்டும் போதாமல்
படமும் வேண்டுமெனக்
கவிஞனோ ஆசிரியரோ ஆசைப்பட்டால்
நெருப்புக்கோழி படம் நிச்சயம்
என்று தலை புதைந்துகொண்டது
மண்ணுக்குள் கவிதை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick