தலையெழுத்து என்ன மொழியிலிருந்தால் என்ன? - நெகிழன் | Tamil Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

தலையெழுத்து என்ன மொழியிலிருந்தால் என்ன? - நெகிழன்

ஓவியம் : செந்தில்

காய்கறிச் சந்தைக்குப் போனேன்.
கடைக்காரர்,
குவிக்கப்பட்டிருந்த தக்காளிகளில் அழுகிய ஒன்றை எடுத்து
எனை நோக்கி நீட்டி,
‘தம்பி, நீதானே இது?’ என்றார்.
தெருவோரம் நின்ற மின்கம்பத்தில்
மூத்திரம் பெய்த நாயொன்று,
தன் நிழலைக் காட்டி
‘நீதானே இது?’ என்று குரைத்தோடியது.
அடுப்பைப் பற்றவைத்த அம்மா,
தீக்குச்சியை வீசும் முன்
உள்ளறையிலிருந்த எனைக் கூப்பிட்டு
‘மகனே, நீதானே இது?’ என்று சிரித்தாள்.
சற்றைக்கு முன்தான் என் தலையெழுத்தை
டாய்லெட் டிஷ்யூ பேப்பரில் வாசிக்க நேர்ந்தது.
பிறகெனக்கு எல்லாம் புரிந்தது.
ஆமாம், எல்லாம்!

டைத்தரகர்,
மாண்புமிகு அதிகாரியவர்களைப் பார்க்கச் சொல்லி அனுப்பினார்.
நீண்ட வரிசையில் நின்றேன்.
பக்கம் சென்றதும்,
இரு கைகளையும் எழுது அட்டையின் மீது வைக்கச் சொன்னார்.
எதையோ தேடி, கிடைக்காத விரக்தியில்
“யூ ஆர் ரிஜெக்டெட்” என்றார்.
இடைத்தரகர்,
“உங்கள் விரலில் சின்ன டேமேஜ்தான்.
விடுங்கள், ஊனமுற்றோருக்கான லைசன்ஸை வாங்கிக்கொள்ளலாம்.”
என்றபடி, “ஒரு ஐந்நூறு ரூபாய்...” எனத் தலையைச் சொறிந்தார்.
வண்டிச்சாவியை வான் நோக்கி வீசிவிட்டு
வீதி வீதியாக, சாலை சாலையாகக் கத்திக்கொண்டே ஓடினேன்.
ஆஹா... ஆஹா...
இனி எனக்குக் கிடைக்கப்போகிறது, அரசின் எக்கச்சக்க சலுகை
எக்கச்சக்க சலுகை.
எக்கச்சக்க, எக்கச்சக்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick