மூங்கைப் பெருந்தவம் - வரவணை செந்தில்

ஓவியங்கள் : வேல்

து, பூனைக்கண்ணு பாறையின் கீழ் வந்து முடிந்த 15 அடி புதுதார்ரோடு. அதன் இறுதியில், ‘சாலை ஒப்பந்த விபரம்’ என்ற தலைப்பில் `புதுச்சின்னாம்பட்டி முதல் மயானம் வரை - 990 மீட்டர் சாலைப்பணி’ என்று குறிக்கப்பட்ட அறிவிப்புப் பலகை நடப்பட்டிருந்து. கடல் மட்டத்திலிருந்து 105 மீட்டர் உயரத்தில் இருந்தது பூனைக்கண்ணு பாறை. அதன்மீது ஏறிப் பார்த்தால் நேர் மேற்கே ராக்காச்சி கரடு தெரியும். அந்தக் கரடை ராக்காச்சியின் தலைமாடாகக்கொண்டால், பூனைக்கண்ணு பாறைதான் கால்மாடு. கால்பரப்பிக்கிடக்கும் அவளின் தனங்களாக வடக்கே ‘பூதல் நத்தம்’ கிராமமும் தெற்கே’ பீமராவ் அருந்ததியர் காலனி’யும் போதுமான இடைவெளியுடன் சற்று சமமான உயரத்தில் இருந்தன.

`காதலியே! உள்ளமெனும் காயத்தோடும்
கனத்துவரும் மூச்சோடும் கண்ணீரோடும்
வாதையுறவோ இவனைக் காதலித்தாய்?
சாதலுறவோ இவனைக் காதலித்தாய்?
புல்லைப்போல் மெலிந்த உனைக் காதல் நோயால்
புண்ணாக்கி மென்மேலும் மெலியவைக்கும்
கல்நெஞ்சக்காரனை ஏன் காதலித்தாய்?
களம்நின்ற வீரனை ஏன் காதலித்தாய்?
சுகங்காட்டும் காதலர் தோள்கள்மீது
துயில்கொள்ளும் எழில்மாதர் வாழும் மண்ணில்
முகங்கூடக் காட்டாது களத்தே வாழும்
முண்டத்தை ஏனம்மா காதலித்தாய்?
பொறு கண்ணே! போர் வாழ்வு நெடுநாள் இல்லை!
பூக்கட்டும் தமிழாட்சி! மறுநாள் உன்றன்
சிறுகாலில் விழ ஓடி வருவேன் அத்தான்!
தித்திக்கும் முத்தம் உன் செவ்வாய்க்கேதான்!’


- காசி ஆனந்தன் கவிதையை மூச்சுவிடாமல் உணர்ச்சி பொங்கப் பாடியபடி அவன் மேடையில் புகுந்து, மைக் முன்னால் நின்றுகொண்டிருக்கும் ‘டான்ஸ் காமிக் - திராவிட ரம்பை’ கரூர் பி.ஆர்.கே.விஜயவல்லியின் தாடையை ஆறுதலாக நிமிர்த்துகிறான். வேறொரு வகையில் அவனின் நுழைவு இருக்குமென தளர்வாக அமர்ந்திருக்கும் கூட்டம், உருக்கமான காதல் காட்சிகண்டு இறுக்கமாகிறது.

``யோவ் நீ பப்பூன்யா... ராஜபார்ட்டுனு நெனப்பாக்கும்’’ என்று விஜயவல்லி பகபகவெனச் சிரிக்க... கோமாளியின் வேடிக்கை புரிந்துகொண்டவுடன், மந்தைச்சனமே குலுங்கிச் சிரிக்கிறது.

``அட ஆமால்ல...’’ என்று அவன் கேனைச்சாயல் செய்து தலை சொறிய, மறுபடியும் சிரிப்பு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick