மெய்ப்பொருள் காண்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

நீசக்காரியம் - ஆதவன் தீட்சண்யா

படங்கள்  : வீ.சதீஷ்குமார்

`தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்’ ஆலங்கோடு லீலாகிருஷ்ணனின் மலையாள நூல். யூமா வாசுகியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. தாத்ரிக்குட்டி, நம்பூதிரிப் பார்ப்பனப் பெண். ஆசாரக்கேடாகப் பல பேருடன் பாலுறவுகொண்டிருந்தாள் என்கிற குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்கு ஆளாகிறாள். விசாரணையைப் பயன்படுத்திக்கொள்ளும் அவள், நம்பூதிரிகளின் குடும்ப அமைப்பு, அது பெண்கள் மீது பாலியல் சுரண்டலையும் ஒடுக்குமுறைகளையும் நிகழ்த்த ஆண்களுக்கு வழங்கியுள்ள அதிகாரம், பாசாங்கான ஒழுக்கவிதிகள், மனிதத்தன்மையற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தன்போக்கில் அம்பலமேற்றுகிறாள். அடுத்து வந்த காலத்தின் மாற்றங்களுக்கு, அவளே இவ்வாறாக விதையூன்றிப் போனாள் என்பதை விவரிக்கும் இந்த நூலில் `நீசக்காரியம்’ என்றொரு சடங்கு குறிப்பிடப்படுகிறது.

நம்பூதிரிக் குடும்பங்களில் மூத்த ஆண் மட்டுமே அதே சாதிக்குள் மணம்முடிக்கும் உரிமையுடையவர். இளையவர்கள் நாயர் சாதியில்தான் மணம் முடித்தாக வேண்டும். இந்த வழக்கத்தினால், நம்பூதிரிப் பெண்களை மணப்பதற்குப் போதுமான நம்பூதிரிகள் கிட்டாத நிலை. எண்ணிக்கையில் நிலவிய இந்தச் சமமின்மை, ஒரு நம்பூதிரிக்கு (வயது வித்தியாசம் பாராது) பல நம்பூதிரிப் பெண்களைக் கட்டிக்கொடுக்கும் அவலத்தை உருவாக்கியது. `நீசம்’ என்பதற்கு, `பொருத்தமில்லாத ஆண்-பெண்களின் புணர்ச்சி’ என்றொரு பொருளுண்டு. அந்த வகையில் நம்பூதிரிகளின் பாலுறவுதான் ‘நீசக்காரியம்’ எனச் சுட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது சுட்டுவதோ வேறொன்றை.

ஆண் தட்டுப்பாட்டினால் நம்பூதிரிப் பெண்கள் பலர் திருமணமின்றி முதிர்கன்னிகளாகவே மடிந்தனர். திருமணம் ஆகாத (கன்னிகழியாதவர்கள் என நம்பப்படுகிற), திருமணம் ஆகியும் கன்னிகழியாத இந்தப் பெண்கள், அதன்பொருட்டு சாபம்விடக்கூடும் என்கிற அச்சம் நம்பூதிரிகளுக்கு உண்டு. சாபம் பலிதமாவதைத் தடுக்க, திருமணம் ஆகாமல் இறக்கும் பெண்ணின் பிணத்தைப் புணர்ந்து, கன்னிகழிக்கும் `நீசக்காரியம்’ என்னும் பரிகாரச் சடங்கைச் செய்கின்றனர். நீசக்காரியத்தை நிறைவேற்றுகிறவர்  ‘நீசக்காரியன்’. தீண்டப்படாத சாதியினர் இதற்காகப் பணிக்கப்பட்டனர்.

பொருத்தமான இணையைத் தேடிக்கொள்வதிலிருந்து பெண்ணைத் தடுத்துவிடுகிற சாதியம், இறந்த பிறகு அவளை சாந்தப்படுத்த மனிதத்தன்மையற்ற இந்தச் சடங்கை கைக்கொண்டிருக்கிறது. பிறர் கண்ணில்படாது வீட்டுக்குள்ளேயே பதுக்கி வைக்கப்பட்ட, வெளியே நடமாடினாலும் தாழம்குடையால் முகம் மறைக்கும்படி பணிக்கப்பட்ட, நம்பூதிரிப்பெண் இறந்ததுமே கன்னிகழிக்க ஒரு தீண்டத்தகாதவரிடம் ஒப்படைக்கப் படுகிறாள். அந்த ஆண்தான் இதற்காக ‘நீசக்காரியன்’ என்று இழித்துரைக்கப் படுகிறார். பிணமாகவேனும் நீசக்காரியத்தில் பங்கெடுக்கவைக்கப்படுகிற அவள்  ‘நீசக்காரியள்’ என்றாகிவிடுவதில்லை. அதாவது, அவர்களது சாதிப் புனிதத்துக்கு எந்த பங்கமுமில்லை. புனிதத்துக்கான வரையறை நம்பூதிரிகளின் தேவைகளுக்கு உட்பட்டதுதான்.

பிணம் தழுவுதல் என்று வள்ளுவரும், அருவருப்பான மணவகை என்று அபே துபுவாவும் இந்த நீசக்காரியத்தைக் குறிப்பிடுவதாக ஒரு வாதமுண்டு. இந்தச் சடங்கு இன்று, மூலவடிவை இழந்து, சந்தனம் தழுவுதலாக பூடகமாகிவிட்டது. இது முற்றாக வழக்கொழிந்தும்போகலாம். ஆனால், தம் பெண்களுக்கும் தீண்டப்படாதாருக்கும் நம்பூதிரிகள் இழைத்த `நீசக்காரியம்’ மொழிக்குள் உறைந்திருந்து அவர்களை கொடும்பலி கேட்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick