காலத்தை கைமாற்றிவிடுதல்... - அர்ஷியா எனும் நினைவு - ஆதிரன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள்: கு.வேல்முருகன், ரெங்கா கருவாயன்

‘சிந்திக்கிறேன்... அதனால் நான் இருக்கிறேன்’ என்றார், ரேனே டெகார்த்தே. என் சிந்தனைகளில் இருந்துதான் என்னை அறிந்துகொள்ளவும் அதன் அடிப்படையில் புரிந்துகொள்ளவும் முடிகிறது. சிந்தனைகளின் ஊடாக எழும் நினைவுகள், பல சிக்கலான உணர்வுகளை மனிதர்களிடம் உருவாக்கிவிடுகிறது. அர்ஷியா என்கிற மனிதர், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் என் நினைவுகளில் இல்லை. பிற்பாடான 18 மாதங்களில் ஐந்து முறை சந்தித்திருக்கிறேன், அவ்வளவே. க.சீ.சிவகுமாரது மரணம்போலவே இவரது மரணமும் முற்றிலும் எதிர்பாராத ஒன்று. இரண்டும் வாழ்வின் சகிக்க முடியாத அபத்தத்தின் நிறுவல்கள். மரணம் ஒரு கைதேர்ந்த முதிய மருத்துவச்சியைப் போல காலத்தைப் பகுத்தாய்வு செய்கிறது. காலம் நொடிக்கு நொடி அகாலமாகப் போய்விடுகிறது. நினைவுகள் என்பதோ மரணத்தைக் கவனமாகத் தவிர்த்து, தனக்கான காலத்தை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறது. மரணம் என்கிற தவிர்க்க முடியாத ஒன்றிற்கு சமாதானம் செய்வதும் அடுத்த நகர்வுக்கு ஊக்கப்படுத்திக்கொள்தலும் உயிரின் இயல்பு என்று சிந்தனை நம்புகிறது. தற்கொலைகள், கொலைகள், நோயுற்றவரின் மரணங்கள், விபத்து மரணங்கள் எனத் தினம் தினம் மரணச் செய்திகளைக் கடக்கும் பணி எனக்கு. ‘ஏற்கெனவே சொல்லப்பட்ட’ கொலைகளை அவதானிக்கும் கூடுதல் பணியும். புள்ளிவிபரங்கள் எனது கனவுகளை நிர்ணயம் செய்கின்றன. எனதான தூக்கம் என்பது மற்றொரு கால அலுவலாகவே ஆகிப்போன பெருந்துயர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick