மக்களிலிருந்து வந்தவர்கள் - இரா.முருகவேள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

19-ம் நூற்றாண்டில் மாபெரும் இலக்கியவாதிகள் ரஷ்யாவில் தோன்றினார்கள். `ரஷ்ய வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சமும் இவர்களது எழுத்தில் நுட்பமாகப் பதிவாகியுள்ளது’ என்று உலகம் கொண்டாடியது. டால்ஸ்டாய் உள்ளிட்ட இந்த எழுத்தாளர்கள், உலகின் ஆறில் ஒரு பகுதியை ஆண்ட ஜார் சக்கரவர்த்தியின் உறவினர்களாகவும், பிரபு வம்சத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். மிகச்சிறந்த கல்வியறிவு பெற்றிருந்தனர். ஒடுக்கப்பட்ட, ஏழை மக்கள் மீது அன்புகொண்டவர்களாகவும், எழுத்தில் நேர்மையுள்ளவர்களாகவும் இருந்தனர். இவ்வளவு இருந்தும்,  உழைக்கும் மக்களின் வாழ்வைப் பாட்டாளி வர்க்கத்தினரைக்கொண்டே எழுதவைக்கும், உழைக்கும் மக்களின் எழுத்தை ஓர் இயக்கமாக்கும் முதல் முயற்சிகள், புரட்சிக்கு முந்தைய ரஷ்யாவில்தான் தோன்றின. போல்ஷிவிக்குகளின் தொழிற்சங்க ஏடுகளில் ஒவ்வோர் இதழிலும் இரண்டு மூன்று தொழிலாளர்களின் கவிதைகளாவது இடம்பெறச் செய்யப்பட்டன. `கெஸட்டா கோபெர்க்கா’ (பைசா இதழ்) என்ற பெயரில் தொழிலாளர்களும் வாங்கும் வகையில் மலிவான விலையில் இலக்கிய இதழ்கள் வெளியிடப்பட்டன.

இந்த முயற்சிகளின் பிதாமகனாக மாக்ஸிம் கார்க்கி இருந்தார். `ஸனனீ’ (Znanie) என்ற இதழில் ஆசிரியாக அவர் 1900-ம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டதும், அதில் தொழிலாளர்களின் எழுத்துகளுக்கு முக்கிய இடம் கொடுக்கத் தொடங்கினார். அவரது முயற்சியால், `ரஷ்ய இலக்கியத்தில் பள்ளி, கல்லூரிப் படிப்பு இல்லாமல் சுயமாகக் கற்றுக்கொண்ட எழுத்தாளர்கள்’ என்ற தனிப்பிரிவே உருவானது. ‘1906-ம் ஆண்டிலிருந்து 1910-ம் ஆண்டு வரை தன்னிடம் ஆலைத் தொழிலாளர்கள் எழுதிய 400 கையெழுத்துப் பிரதிகள் வந்து சேர்ந்தன’ என்றார் அவர். இவர்களுக்கு `மக்களிலிருந்து வந்தவர்கள்’ என்று பெயரிட்டவரும் கார்க்கிதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick