ரொட்டிகளை விளைவிப்பவன் - ஸ்டாலின் சரவணன்

ஓவியம் : மணிவண்ணன்

கல்லாப்பெட்டியில் அமர்ந்திருக்கும்
செழித்த உருவம்
மடக்கென தாது நீக்கப்பட்ட நீரை அண்ணாத்தி
சரிந்த உடலை நிமிர்த்தியபடி
உரையாடலைத் துவக்குகிறது.
“உழ, நீர்ப் பாய்ச்ச, களையெடுக்க, கால்நடைகளுக்குத் தீவனம்வைக்கத்
தெரியும்”
என்ற ஒடிசலான தேகத்தின் பதில்கள்
போதுமென கை உயர்த்தப்பட்டு ஆசீர்வதிக்கப்படுகிறார்.
கால் மயிர்களில் ஒளிந்திருந்த ஊர்மண்ணைக் கழுவி முடித்து
வெண் மாவில் நீர்ப் பாய்ச்சி
சேறெனப் பிசைந்து
உருட்டப்பட்ட மாவுதனை
வாய்க்காலில் மண்கொண்டு உள்ளங்கையால் அடைப்பதுபோல்
ஒரு மென் அழுத்து.
உரம் வீசும் லாகவத்தில் ஒரு வீச்சு.
மேல் மண்ணைக் கீழாக, கீழ் மண்ணை மேலாக உருட்டும்
மண்புழுவென சில புரட்டல்களின் பின்
பெருநகரத்துக்கு
இன்னொரு பரோட்டா மாஸ்டர் கிடைத்துவிட்டார்.
ஆத்தி மாலை சூடி தேர்வில் தலைவன் வெற்றி பெற்ற சேதியை
நல்லூரில் பானைகளை உருட்டிக்கொண்டிருக்கும் தலைவிக்குத் தெரிவிப்பதற்காக
நியான் எழுத்துகள் மின்னும் பலகையில்
காத்திருக்கும் காகம் சிறகடித்தபடி எம்ப
ஊரில் வெடித்துக் கிடக்கும் நிலம் மேலும் கதறத் தொடங்கிற்று.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick