தலைக்கடன் - இமையம்

ஓவியங்கள் : மணிவண்ணன்

களிர் காவல் நிலையத்தின் வாசலுக்குச் சற்றுத் தள்ளி, கிழக்கிலிருந்த இலுப்பை மரத்தின் நிழலில் உட்கார்ந்திருந்த தன்னுடைய அம்மா, அண்ணன், அண்ணியை நோக்கி, இடுப்பிலிருந்த குழந்தையுடன் சாலையைக் கடந்துவந்தாள் சீனியம்மா.

“புள்ளக்கி என்னா வாங்கிக் கொடுத்த?” என்று மேகவர்ணம் கேட்டாள். அதற்குச் சீனியம்மா பட்டும்படாமலும் “டீயும் பன்னும்தான்” என்று சொன்னாள்.

காவல் நிலையத்தின் பக்கம் பார்த்தாள். பிறகு, தலையைக் கவிழ்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த தன்னுடைய அண்ணன் சுந்தரத்தைப் பார்த்ததும் சீனியம்மாவுக்கு அழுகை வந்துவிட்டது. அழுகையை மறைப்பதற்காக அங்குமிங்கும் பார்த்தாள். அப்போதும் அவளுக்கு அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ‘‘ஒன்னெக் கொண்டாந்து இந்த எடத்தில ஒக்கார வச்சிட்டன்னு நெனைக்காத.  ஒரு வருஷமா நான் பட்ட கதெ ஒனக்குத் தெரியும்” என்று சொல்லிவிட்டு அழுதாள். அவள் அழுததைப் பார்த்ததும் சுந்தரம், தவமணி, மேகவர்ணம் என்று மூன்று பேருக்குமே அழுகை வந்துவிட்டது. அழுதுகொண்டே மேகவர்ணம் சொன்னாள், ‘‘எப்படி நான் புள்ள பெத்தன்? எப்பிடி நான் புள்ள வளத்தன்? கடைசியில எமங்கிட்ட கொண்டுபோயிக் கொடுத்திட்டனே.”

“எதுக்கு நீ கண்கலங்குற? ஒனக்கும் ஒம் புள்ளக்கும் தனி ஒலவச்சி, தனி அடுப்புவச்சா பொங்கப்போறன்? ஒங்கண்ணன் எப்பியும் தங்கச்சிண்ணா உசுராத்தான இருக்காரு” என்று சொன்ன தவமணியைப் பார்த்த சீனியம்மா, ‘தெரியும்’ என்பதுபோல தலையை மட்டும் ஆட்டினாள். பிறகு சாலையின் பக்கம் பார்த்தாள். பள்ளிக்கூடம்விட்டு சைக்கிளில் போய்க்கொண்டிருந்த ஏழெட்டுப் பிள்ளைகளைப் பார்த்தாள். நின்றுகொண்டிருந்த சீனியம்மாவிடம் சுந்தரம் சொன்னான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick