அவற்றின் கண்கள் - பா.திருச்செந்தாழை

ஓவியங்கள் : ரமணன்

வில்சன் - மேரி, ஓய்வுபெற்ற ஆசிரியத் தம்பதி. மேரி இன்று இறந்துவிட்டிருந்தார். பணி நாளினிடையே ஒரு மரணக் குறிப்பானது கார்ட்டூன் தோற்றம் பெற்றுவிடுகிறது. ஹவுசிங்போர்டு முட்டுச்சந்தில் அவர்களின் வீடு இருந்தது. நீராதாரம் இழந்துவிட்டு வீடுகளைக் கைவிட்டுச் சென்றுவிட்டவர்களால் அந்தத் தெரு சூன்யமடைந்திருந்தது. இயல்பாகவே முட்டுச்சந்து வீடுகள் காலத்தில் அதிர்ச்சியடைந்து அமைதியானவை. அநாதைக் கூழாங்கற்களில், மரங்களில், ஜன்னல்களில் பிணங்களைப்போல இறுகிவிட்ட ஈரத்திற்காகக் காயவைக்கப்பட்ட கொடித்துணிகளில் முட்டுச்சந்துகள் தங்களின் துக்கத்தை வளர்க்கின்றன. அதேவேளையில், பருவகால நோயொன்றிலிருந்து மீண்டுகொண்டிருப்பவனுக்கு முட்டுச்சந்து வீடுகள் தருகின்ற அமைதி தனித்துவமிக்கது. கிறித்தவ வீடுகளுக்கே உரிய ஒரு மருத்துவ நிசப்தமும், லேசாகக் கண்ணாடிப்பொழிவு ஏறிவிட்ட சிமிட்டித் தரையும்கொண்ட எளிய வீடு அது.

வில்சன் - மேரி தம்பதிக்குக் குழந்தைகளில்லை. குழந்தையற்றவர்கள் தங்களின் வயது மீதான ஓர்மையை இழந்துவிடுவதோடு, துக்க நாடகத்தின் சாயலோடு குழந்தையின் துடுக்குத்தனங்களையும் பிரதி செய்கிறார்கள். வில்சனும் மேரியும் சர்ச்சுக்குச் செல்கையில் தங்களுக்குள் சிறுசிறு சண்டைகள் பழிப்புகள் செய்துகொள்வார்கள். பிரார்த்தனை முடிந்து திரும்புகையில் சிறிய பழங்கள், கிழங்குகளைக் கொறித்தபடி சாலையோர நிழலில் நடந்து செல்வார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick