அடுத்து என்ன? - அஷேரா நினைவிலும் கனவிலும் பரவியிருக்கும் சா ஓலம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

திரை என்கிற பெண், தன்னுடைய மார்பின் குருதிச் சேற்றுக்குள் புதைந்திருந்த சயனைட் குப்பியைக் கடித்துத் தன்னை மாய்த்துக்கொண்ட இறுதிப் பக்கத்தை எழுதி முடித்த நாளில், முதுகில் சுமந்துவாறு அலைந்து திரிந்த ஒரு பெரும் குற்றஉணர்ச்சியை   இறக்கிவைத்துவிட்டுத் தப்பித்துக்கொண்டதைப்போலத் தோன்றிற்று. இனித் தாய்நிலத்திலிருந்து வெளியேறும் படைப்புமனம், புலம்பெயர்ந்த தேசத்தின் மனிதர்களிலும் அவர்களுடைய வாழ்விலும் சஞ்சரிக்கத் தொடங்குமென்றும் துப்பாக்கி வெடிக்காத பிரதியொன்றை எழுதிவிடமுடியுமென்றும் தோன்றிற்று. சிலகாலம் கழித்து, ‘அஷேரா’வை எழுதத் தொடங்கினேன். ‘அஷேரா’, என்பவள் கானானியர்களின் வானரசி. ஏதேனின் ராக்கினி. ஆனாலும் ஒரு பெண்.

இந்த உலகம் பெண்களால் இயங்குகிறதென்பதைச் சிறுவயதுகளிலேயே நம்பினேன். அப்பம்மா, அத்தை, அம்மாவெனப் பெண்கள் தனித்திருந்து  அந்த உலகத்தை இயக்கினார்கள். அவர்களே ஜீவ பாதையைச் செப்பனிட்டார்கள். அந்தப் பாதைவழியே தன்னுடைய மாந்தரை வழிநடத்துவது அவர்களுடைய ஆதிக்குணம் என்ற அறிதல் ஏற்பட்டிருந்தது.

பெண்ணுடைய அதிகாரத்தை ருசித்தல் என்பது ஓர் அலாதியான அனுபவம். ஆனால், பொதுவான ஆண்மனத்திற்கு அது குமைச்சலை ஏற்படுத்துகிறது. அதனால், அவளுடைய ஆளுமையின் சக்தி மூலமாக தானேயிருக்கின்றேன் என்று பாவனை செய்ய ஆரம்பிக்கின்றது. அதைப் பிரகடனம் செய்வதற்காக நிறைய பிரயத்தனம் செய்கிறது. பொருளாதாரத்தையும், மரபான சமூக மதிப்பையும், உடல் வலுவையும் அதற்கான ஆயுதங்களாகப் பிரயோகித்து எக்காளத்துடன் நிறுவ முயல்கிறது. பெண்ணோ தன் வலு உணர்ந்தவள். அவள் ஒருபோதும் போட்டியிடுவதில்லை. ‘இருந்துவிட்டுப் போ’ என்கிற உளப்பாங்கு அவளுடையது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick