முதன் முதலாக - சாட்சி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கே.என்.செந்தில், படங்கள் : ரமேஷ் கந்தசாமி

மாற்றமேயில்லாத சலிப்பூட்டும் ஒருபடித்தான நிரல்களைக்கொண்ட வழமையானதொரு நாளாகவே அது இருந்தது, வீடு திரும்பும் வரை. வீட்டினுள் நுழைந்ததுமே ஏற்கமுடியாத விசித்திரத்தைக் காண நேர்ந்ததுபோல மாறிய முகங்கள் மெழுகால் செய்யப்பட்டவையாகச் சலனமற்று என்னை உற்று நோக்கின. அது ஒருவகையான முறைப்பு போன்றும் தோன்றியது. சகஜமாகயிருக்க முயன்று சிரித்ததும், ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியின் சத்தம் தணிக்கப்பட்டு ‘போலீஸ் வந்து உன்னயக் கேட்டுட்டுப் போச்சு...’ என்றாள் அம்மா.  அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்து வேகமாக வந்த அப்பா, ‘அப்படி நீ என்ன பண்ணுன..?’ என அதட்டும் தொனியில் கேட்டுவிட்டு, தொடர்ந்து பேசிக்கொண்டே சென்றார்.  அது எதுவும் காதில் விழாமல் அம்மா சொன்ன அந்த முதல் தகவலிலேயே சிக்குண்டிருந்தேன். அதற்குள்ளாக அந்தச் சில நிமிடங்களில் மூன்று நான்கு வாழ்க்கைகளை வாழ்ந்து தீர்த்துவிட்டிருந்தேன். ஒன்றில் சிறையினுள் எவரிடமும் பேசாமல் வெறித்து அமர்ந்திருக்கிறேன். மற்றொன்றில் ‘பேர் மாறிடுச்சு... நீங்க இல்ல சார்... ஸாரி!’ எனக் காவல்துறை உயரதிகாரி மன்னிப்பு கோருகிறார். வேறொன்றில் அடி தாங்காமல் ‘எனக்கொன்னும் தெரியாது...’ எனத் திரும்பத் திரும்ப அனத்தியபடியே கிடக்கிறேன்.

அவற்றிலிருந்தெல்லாம் மீண்டு, நீர் கேட்டபோதும் பதற்றம் தணிந்திருக்கவில்லை. அப்போது வயிற்றில் சுரந்த அமிலத்தின் காரத்தை மட்டுப்படுத்த அபரிமிதமான அளவு தண்ணீர் குடித்தேன். அந்தக் கொள்ளளவைச் சாதாரணமான வேளையொன்றில் விழுங்கியிருந்தால் எக்கி எக்கி வாந்தியெடுத்திருக்கக்கூடும்.  இன்னதென்று அறியாத பயம் குடிகொண்டுவிட்டால் அசாதாரணமான தளத்திற்கு மனமும் உடலும் நகர்ந்துவிடும் போலும். உடைமாற்றாமலேயே ஸ்டேஷனுக்குச் செல்ல ஆயத்தமானதைக் கண்டு, ‘ஏதோ கேஸ்ஸுனு சொன்னாங்க...’ என அம்மா இழுத்தாள். நீண்ட பெருமூச்சுடன் ‘எதையும் உருப்படியா முழுசா காது கொடுத்துக் கேட்றாத... பாதி பாதியாச் சொல்லி என்னயப் போட்டு அழு...’ எனச் சுவரதிரக் கத்தினேன். வெளியே வந்து, உடன் அழைத்துச் செல்ல, தெரிந்த முகம் ஏதேனும் தட்டுப்படுகிறதா? என்று பார்த்தேன். இனி அவர்கள்வேறு வந்து தனியாகப் புதிய அமிலத்தைக் கரைப்பார்களே எனும் பீதியில் தனியாகவே சென்றேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick