ந.முத்துசாமி - தொடர்ச்சியான உயிரியக்கத்தின் குறியீடு

அஞ்சலிவெளி ரங்கராஜன், படங்கள் : கே.ராஜசேகரன்

1973-ல் வேலை நிமித்தமாக நான் சென்னை வந்தபோது, முதலில் சந்தித்தது முத்துசாமியைத்தான். அப்போது, அவர் வாலாஜா சாலையில் ஒரு வீட்டின் மாடியில் குடியிருந்துகொண்டு, ஒரு கம்பெனியில் வேலைபார்த்துக்கொண்டிருந்தார். நான் திருவல்லிக்கேணியில் ஒரு அறையில் தங்கியிருந்தேன். ‘பிரக்ஞை’ பத்திரிகையில் சென்னை பல்கலைக்கழக அரங்கத்தில் அவர் பார்த்த, பொம்மலாட்ட நிகழ்ச்சி பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். முத்துசாமியின் விவரிப்பில், அந்த நிகழ்வு ஓர் அரங்கத்துக்கான எல்லாப்  பரிமாணங்களும்கொண்டு ஒரு முடிவற்ற வெளியில் பல்வேறு மன அதிர்வுகளை சுண்டியிழுப்பதுபோல் உருவங்கள் நடனமாடிக்கொண்டிருந்தன. நடன அசைவுகளை ஓர் அரங்கமாக பாவித்து, விரிவாக்கிக்கொண்டுபோகிற ஒரு மனம் அதில் வெளிப்பட்டது. நேரில் சந்தித்தபோது, அந்த நிகழ்ச்சி பற்றி விரிவாகப் பேசினார். மற்றொரு சந்தர்ப்பத்தில் கலைவாணர் அரங்கத்தில் நடந்த நடேசத் தம்பிரான் கூத்து பற்றி பேசினார். அவர் ஏற்கெனவே கூத்தின் அழகியல் பற்றியும் கூத்துதான் தமிழர்களின் அரங்கு என்பது பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதியிருந்தார். அவை பற்றி எனக்கு எந்த உறுதியான கருத்தும் இல்லை. நான் நவீன இலக்கியம் சார்ந்த கருத்துகளை நாடகத்தில் புகுத்திப் பார்க்க வேண்டும் என்கிற மனநிலை கொண்டவனாக இருந்தேன். அப்போது சென்னையில் உள்ள பிரெஞ்சுக் கலாசார மையம், ஜெர்மன் கலாசார மையம், பிரிட்டிஷ் கவுன்சில் ஆகியவற்றில் புதிய நாடக நிகழ்வுகள், கலை சினிமா திரையிடல்கள்போதெல்லாம் நாங்கள் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன. அப்போது பிரெஞ்சுக் கலாசார மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடேசத் தம்பிரான் தெருக்கூத்து நிகழ்வு, மிகப்பெரிய மன அதிர்வுகளை உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாகத்தான் முத்துசாமி மற்றும் ‘பிரக்ஞை’ நண்பர்கள் வீராச்சாமி, ரவிஷங்கர், பாரவி எல்லோரும் இணைந்து கூத்துப்பட்டறை அமைப்பை உருவாக்கினார்கள்.

பலவிதமான அரங்க பாணிகளை விவாதிக்கும் ஓர் அமைப்பாகத்தான் கூத்துப்பட்டறை முதலில் உருவாக்கப்பட்டது. நான் அனைத்து செயல்பாடுகளிலும் ஓர் ஆர்வமுள்ள பார்வையாளனாகப் பங்கேற்றேன். அந்தக் காலகட்ட கூத்துப்பட்டறையின் நிகழ்வுகளெல்லாம் நாடகம் குறித்த ஒரு புத்துணர்வை உருவாக்குவதாக இருந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick