மெய்ப்பொருள் காண் - போக்கு

கண்மணி குணசேகரன், படம் : எஸ்.தேவராஜன்

டுநாட்டுச் சொல்லகராதி சொற்சேகரத்தில் 17 ஆண்டுகள் பயணித்ததில், என்னைப் பிரமிக்கவைத்த சொற்கள் ஏராளம். குறிப்பாகப் `போக்கு’ போன்று ஒரு சொல். தொண்டைக்குழியிலேயே எப்போதும் நின்றுகொண்டு, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வாய்மொழியில் வந்து வந்து உரையாடலைச் செழுமைப்படுத்திக்கொண்டிருக்கும்.

இந்தப் `போக்கு’ பொதுமொழியில் எவ்வளவு முக்கியத்துவமும் பயன்பாடும் கொண்டதாக இருக்கிறதோ அதே அளவு வட்டார வழக்கிலும் வலுவாக இன்றளவும் இருந்துவருகிறது. ஒருவருடைய செயல்பாடு, நடத்தை, தன்மை போன்றவற்றைக் குறிப்பிடும் ஒட்டுமொத்தச் சொல்லாக `போக்கு’ என்பது பொதுப்பயன்பாட்டில் உள்ளது.

`அவம் போற போக்கு ஒண்ணும் சரியில்லடா’, ‘பொட்டப்புள்ளிவோகிட்ட மட்டும் அதுபோற போக்குல வுட்டு அப்பறந்தான் மடக்கணும்’ மேலும் ஒரு ஊருக்குப் போய் தங்கி, உண்டு உறவாடி மனம் மகிழ வசதியற்ற, சொந்தபந்தமற்ற ஒருவரது இறுகிய வாழ்வைக் குறிக்கும் `போக்கத்த…’ எனும் ஏளனச் சொல்லாகவும் எதிர்மறைப் பயன்பாட்டில் இருக்கிறது. ``அந்தப் போக்கத்த பயகிட்ட வாயக்குடுத்தா மின்னப் பின்ன இல்லாமதான் பேசுவான்.”

இதுவல்லாமல், வட்டாரவழக்கில் `பெரும்போக்கு’ என்று குறிப்பிடுவது ஒருவரது மிதமிஞ்சிய செலவுத்தன்மையைச் சுட்டுவதாகும். ``அவன்லாம் எதிலியும் பெரும்போக்குதான். அன்னிக்கி அப்பிடித்தான் சரக்கு சாப்புடணும்னு சொல்லி இட்டுக்கிட்டுப் போயி… தெடலடிதான்.” `மேம்போக்கு’ம் உண்டு. ஒருவரது அமைதியான, அற்ப விஷயங்களைப் பொருட்படுத்தாத மனப்பக்குவம். ``மீதிக் காசு என்னாச்சினுலாம் அவரு நோண்ட மாட்டாரு. நம்பாளு எதாவது பாட்லுகீட்லுன்னு நவுந்துருப்பான்னு மேம்போக்கா போயிடுவாரு…” மேலும் `நீட்டுப்போக்கு’ ஒன்றுண்டு. குடும்பத்தின் சுமைகளைக் கண்டுகொள்ளாமல் சுற்றிவருபவர்களைச் சொல்வது. ``அவன் அப்பன் சம்பாரிச்சி வெச்சிருக்கான். அதான் போதையப் போட்டுக்கிட்டு பொழுதேறிக்கும் நீட்டுப்போக்குல சுத்தி வரான்.”

`போக்குமடை’ என்ற சொல் விவசாயத்தில் வருவது. வாய்க்காலில் தண்ணீர் போகும்போது, வயலுக்குத் தண்ணீர் நிரம்புகிற மாதிரியும் அதேசமயத்தில் நீர்வரத்து குறையும்போது வயலில் உள்ள தண்ணீர் வாய்க்காலுக்கு வடிந்துவிடாதபடியுமான மடைத்திறப்பு. ``வாய்க்கா வரப்புலாம் நெரவிக்கிட்டுப் போறப்ப, போக்குமட, தத்து மடையலாமா வெள்ளம் பாக்குது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick