தொடர்ந்து கொண்டிருந்த இரவு

ஸ்ரீஷங்கர், ஓவியம் : மணிவண்ணன்

சிறு உழக்கோடு
கழுதையை அழைத்துக்கொண்டு ஒருவன் எங்களைக் கடந்துசென்றபோது
கடமையேதுமின்றி
நசநசக்கும் சந்தையருகே புகைத்தபடியிருந்தோம்
அதுவொரு தூரல்காலமாக இருந்தது
பாறைகளை அறுக்கும் பணியிலிருக்கிற நண்பனைச் சந்திப்பதென
நாங்கள் தேர்ந்துகொண்ட பயணத்தில்
நிலக்காட்சிகளோடு
தோள்பையிலிருந்த கொஞ்ச மதுவையும் பகிர்ந்துகொண்டோம்
வறண்ட பனி வீசிய
சிறுகுன்றுகள் விரவிக்கிடக்கும் அப்பகுதியை வந்தடைந்திருக்கையில்
சடைத்த கள்மரமொன்றின் சிரசில்
செம்மஞ்சளில் பழமொன்று கனிந்தபடியிருந்தது
சிலர்
ஆலைகளிலிருந்து தம் குடிசைகளுக்குத் திரும்பிக்கொண்டிருக்க
இடுப்பில் சிறு சாக்குக் கட்டோடு
கோடாலிக்கொண்டையில் ஒருத்தி வசீகரித்தாள்
மாலையின் இறுதியில்
தானியக்களத்தில் இன்னும் சிலரோடு கூடினோம்
நாட்டு மதுவுக்குத் துணையாக
மலை விலங்கொன்றின் இறைச்சியும் ஏற்பாடாகியிருந்தது
அதிகம் தற்கொலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நீர்த்தேக்கம்
அதிகாரத்தின் பாதுகாப்புக்கென
இளைஞர்களை முடையும் பயிற்சி முகாம்
சற்றுத் தொலைவிருக்கும் அணுநிலைய விரிவாக்கத்தால்
இதுவரை செய்துவந்த தொழில்நசிவென பேச்சுகள் நீண்டிருக்க
அடர்ந்துகொண்டிருந்தது குளிர்
கைவிளக்கோடு ஊர்க் காவலாளி கடந்தபோது
சிலர் உறக்கத்தின் தோளில் சரிந்தனர்
நிதானமிழந்த ஒருவன்
கால்நடையொன்றின் பூந்தசையிடம் தோல்வியுற்றதை
யாரிடம் சொல்கிறானென அனுமானிக்கமுடியவில்லை
இதுபோன்றதான இடத்தின் நிலவியல் காலவேறுபாடுகளின் சலனங்கள்
தனிமை அடரும்படி உரையாடலைப் பெருக்க
எஞ்சியிருந்த மதுவை பதற்றத்தோடு எடுத்துக்கொண்டேன்
ஆடையுரிந்து கிடந்த இளைஞனின் அருகே
சில பொட்டலங்களோடு மதுசீசாக்கள் சிதறிக் கிடந்தன
போர்வைக்குள் ஒண்டியபடி
விழித்திருந்த திசையில்
தொடர்ச்சியற்ற தூர நாய்களின் குரைப்பொலி கேட்கும்படி
அந்த இரவு தொடர்ந்துகொண்டிருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick