ஆறாவது பூதம்

ஓவியம் : மணிவண்ணன்

நேசமற்ற காலம்
வடிவம் சிதைந்த நிலத்துண்டாக
விழுந்து கிடக்கிறது
அதைச் சுழற்றியடித்ததில் பிளந்த கடலின் மார்பில்
மீன்கள் இன்னும் துள்ளிக்கொண்டிருக்கின்றன
படுக்கைத்துணை இல்லாதவர்கள் வரலாம்
தாகமோடிருக்கிறது நிலம்
பிரிவுற்ற மனம்
நிறம் இழந்த மூங்கில் குருத்தாக
சாய்ந்து கிடக்கிறது
அதை நட்டுவைத்ததில் எரிந்த மலையின் கூந்தலில்
மலர்கள் இன்னும் மணந்துகொண்டிருக்கின்றன
காதலை இழந்தவர்கள் வரலாம்
பசியோடிருக்கிறது தீ
பொய்த்துப்போன சொல்
திக்கற்ற நட்சத்திரமாக
உதிர்ந்து கிடக்கிறது
அதைப் புதைத்ததில் கிளம்பிய மண்சூறையில்
விதைகள் இன்னும் வெடித்துக்கொண்டிருக்கின்றன
முத்தத் தழும்புகள் ஆறாதவர்கள் வரலாம்
காமத்தோடிருக்கிறது காற்று
கைவிடப்பட்ட நினைவு
அநாதைச் சடலமென
திறந்து கிடக்கிறது
அதைத் தூவியதில் கலைந்த மேகங்களின் சூலில்
மழை இன்னும் திரண்டுகொண்டிருக்கிறது
மடி தேடுபவர்கள் வரலாம்
விசனத்தோடிருக்கிறது ஆகாயம்

துய்க்காத ஏக்கம்
உறைய மறுக்கும் குருதியாக
கசகசத்துக் கிடக்கிறது
அதை இரைத்ததில் மூழ்கிய காட்டின் நாளங்களில்
ஆறு இன்னும் சுரந்துகொண்டிருக்கிறது
தனியே சாக விரும்பாதவர்கள் வரலாம்
தவிப்போடிருக்கிறது நீர்.
(வெய்யிலுக்கு)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick