பிரிவுக்குறிப்பு

ழைக்காலம் தொடங்கி மூன்று நாள்கள் ஆகியிருந்தன. வாய்க்கால்களில் நீரோட்டம் அதிகரித்திருந்தது. ஒரு மதிய நேரத்தில் நானும் உருத்திரனும் மழையில் நனைந்துகொண்டு புல்வெளியில் படுத்துக்கிடந்தோம். துளிகள் தீண்டும் சிலிர்ப்பு உடலெங்கும் ஊர்ந்தது. புற்களிலிருந்து சிதறி எழுகிற பூமியின் வாசத்தை மழை எழுப்பிக் கொண்டேயிருந்தது. நாம் படுத்திருக்கும் இந்தப் புல்வெளிக்கு அருகே ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்காலில் அழகுக்குக் கையளிக்கப்பட்ட திரவம்போல நீர் சப்தத்தோடு நகர்ந்துகொண்டிருந்தது. உருத்திரன் மழையில் நனைந்தபடி கண்கள் சொருகி நித்திரையானான். அவனின் மேனி தழுவி பூமியில் வழியும் மழைத்துளிகளுக்கு வெளிச்சம் நிறைகிறது. எம்மிருவரின் துவக்குகளும் பெரிய மரமொன்றின் பொந்திற்குள் சாத்திவைக்கப்பட்டிருந்தன. இனிமையாக இருக்கும் இப்படியொரு நீர்மையான இளைப்பாறல் அந்தரங்க  ரகசியமாய் எனக்குள் பூத்தது. மேகங்கள் கருந்திரளாய் தொங்கிக்கொண்டே  இருந்தன. மழையின் கனிவு நம்மிருவருக்கு மட்டும் சுரப்பதைப்போலிருந்தது. மின்னல் திறக்கையில் கண்ணை  மூடிக்கொண்டேன். உருத்திரன் மழையைப் போர்வையாக்கி, ஓடும்நீரைப் படுக்கையாக்கி, இடியையும் மின்னலையும் சொப்பனமாக்கி நீண்ட நேரமாயிருந்தது. என்னுடைய சிந்தையின் துவாரங்களில் வீசி நுழையும் விரல்போன்ற குளிர்க்காற்றில் வந்தமர்ந்தாள் வான்மலர். அவளின் இமை திறந்து மயில்போல அகவும் சின்னஞ்சிறு அசைவு என் ஞாபகத்தில் காய்த்தது. உடலுக்குள் பெருங்காற்றின் ஒலி அதிர்கிறது. வான்மலரின் வாசம் என்னைச் சூழ்ந்துவிட்டது. முத்தத்தின் கதகதப்பு தெரிந்த கம்பளிப் புழுக்களாய் என்மீது ஊர்ந்துகொண்டிருக்கும் பேருணர்ச்சிக்குப் பெயரென்ன? நினைவுகளில் தத்தளிக்கும் பசலையின் பாசியில் நானொரு  கல்லென வளர்ந்துகொண்டிருந்தேன்.

இந்தக் கதையின் துயர்மிகுந்த பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டதனாலும் குறிப்பாக, கதைசொல்லியின் காதல் கதை இல்லை என்பதனாலும் சற்றே நிமிடங்களில் நிறைவுறும் இந்தக் கதையைக் கட்டுநாயக்க விமான நிலையத்தில்வைத்து ஒருவருக்குச் சொல்லத் தொடங்கினேன். விமானம் சென்னையை நோக்கிப்  பறக்கத் தொடங்கியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick