கவிதையின் கையசைப்பு - 4

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கவிதை எழுதுவதற்காகவே வாழ்கிறேன்

ரபுக் கவிதைகளின் தொகுப்பு நூல் ஒன்றில், சுமியா அல் காசிம் என்ற கவிஞரின் ஒரு கவிதையை வாசித்தேன். அக்கவிதையில் ஒரு சிறுமி, ‘பூமி ஏன் சுழல்கிறது?’ எனக் கேட்கிறாள். அதற்கு அக்கவி, ‘கடவுள் ஒருநாள் காலையில் காபி குடிக்கும்போது, சர்க்கரைத்துண்டினைக் கரைப்பதற்காக ஸ்பூனைக் கோப்பையினுள் சுழற்றத் தொடங்கினார். சர்க்கரைத்துண்டு கரையவில்லை. வேகமாக ஸ்பூனைச் சுழற்றினார். அந்தச் சுழற்சியின் காரணமாகவே பூமி சுழலத் தொடங்கியது’ எனக் கூறுகிறான். இந்தக் கவிதையை வாசித்தபோது வியப்பாக இருந்தது. மறுபுறம், நவீனக் கவிதையின் புதுக்குரலைக் கேட்ட உற்சாகம் உருவாகியது.

மதச்சட்டங்களால் ஆளப்படும் அரபு உலகிலிருந்து காலைக் காபி குடிக்கும் கடவுள் உருவாகிறார் என்பது நவீனத்துவத்தின் அடையாளம். காபிக்கான சர்க்கரையைக் கரைக்கத் தொடங்கிய கடவுளின் கைச்சுழற்சியால் பூமியும் சுழலத் தொடங்கியது என்பது வேடிக்கையான மறுமொழிபோலத் தோன்றுகிறது. ஆனால், அன்றாட வாழ்விலிருந்தே உலகம் சுழல ஆரம்பிக்கிறது என்பதைக் குறிப்பதாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம். கவிதையில் பூமி, கடவுளின் மேஜைபோல உருமாறுகிறது. `கடவுளின் காலைக் காபி’ என்ற சொற்பிரயோகம் கடவுளோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. கடவுள் குறித்து நம் மனம் கட்டிவைத்திருந்த புனிதபிம்பம் கலைந்துபோய் சகமனிதனைப்போலக் கடவுள் உருமாறுகிறார்.

 கவிதை எப்போதுமே நாம் அறிந்த உலகை, அறியாத உலகமாக மாற்றுகிறது; அன்றாட உலகின் பொருள்களுடன் புதிய உறவை ஏற்படுத்துகிறது. பயன்பாடு சார்ந்து மட்டுமே அர்த்தம்கொண்டி
ருந்தவற்றை அதைக்கடந்து வேறு தளங்களில் வேறு அர்த்தம்கொள்ளச் செய்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick