முதன்முதலாக... - காதலின் எஞ்சிய அடையாளம் | Devi Bharathi sharing his First Love Experience - Vikatan Thadam | விகடன் தடம்

முதன்முதலாக... - காதலின் எஞ்சிய அடையாளம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தேவிபாரதி, படங்கள் : ரமேஷ் கந்தசாமி

னது முதல் காதல் பற்றி, மாக்சிம் கார்க்கி நெடுங்கதை ஒன்றை எழுதியிருப்பார். புரட்சியின் புயல்பறவையாக அறியப்பட்டிருக்கும் கார்க்கிக்கு, காதல் பற்றிச் சிந்திக்க அவகாசம் இருந்திருக்கும் என நினைப்பது அவரது வாசகர்களுக்குச் சற்று சங்கடமான விஷயம். கார்க்கியைப்போலவே இவான் துர்க்கனேவ் தன் முதல் காதல் பற்றி நெடுங்கதை ஒன்றை எழுதியிருக்கிறார். பொதுவாகவே ருஷ்ய இலக்கியத்தில் காதலுக்கு மிகச் சிறப்பான இடம் இருந்துவந்திருக்கிறது. டால்ஸ்டாயும் தாஸ்தாயெவ்ஸ்கியும் மிகச் சிறந்த காதல் கதைகளை எழுதியிருக்கிறார்கள். அவை காதலின் அர்த்தத்தையும் அர்த்த மின்மையையும் பற்றிய மகத்தான படைப்புகளாக உலக இலக்கியத்தில் நிலைபெற்றிருப்பவை. உதாரணம், `அன்ன கரீனினா’வும் ‘இடியட்’டும்.

சங்ககாலம் தொட்டுத் தமிழ் இலக்கியத்துக்கும் காதலே முக்கியமான பாடுபொருளாக இருந்துவந்திருக்கிறது. திருக்குறளில் அதற்கென்று ஓர் இயல் ஒதுக்கப்பட்டிருக்கிறது அல்லவா? புனைவுகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. விதவிதமான நாயகன்-நாயகிகள், விதவிதமான காதல்கள். கவிதை பிறந்ததே காதலைப் போற்றுவதற்காகத்தான் எனக் கருதும் அளவுக்குத் தமிழில் காதல் கவிதைகள் கோலோச்சியிருக்கின்றன. எல்லாவற்றையும்விட முக்கியமானதாகக் குறிப்பிடப்பட வேண்டியது தமிழ் சினிமா. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ் சினிமா கட்டியெழுப்பியுள்ள காதல் கோட்டைகள் எண்ணிலடங்காதவை.

என்னுடைய முதல் காதலை வடிவமைத்தவை, கவிதைகளும் கதைகளும் சினிமாக்களுமாகத்தான் இருக்க வேண்டும் என இப்போது தோன்றுகிறது.

1970-களின் நடுப்பகுதி, பதின்ம வயதின் தொடக்கத்தில் இருந்த நான், அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்றில் எட்டாவதோ, ஒன்பதாவதோ படித்துக்கொண்டிருந்தேன். அப்பா, தொடக்கப் பள்ளி ஆசிரியர். அப்போதைய ஈரோடு மாவட்டத்தின் சிறு கிராமம் ஒன்றில், ஆள் உயரமே உள்ள ஓட்டுவீடு ஒன்றில் வசித்துவந்தோம். எதிரே சாலையின் மறுபுறத்தில் பெரிய தொட்டிக்கட்டு வீடு. செல்வாக்கும் பாரம்பர்யப் பெருமிதமும்கொண்ட மிராசுதார் வீடு. அந்த வீட்டின் இளவரசி என் பால்யகாலத் தோழி; காதல் பற்றியக் கற்பிதங்களை உருவாக்கிக்கொள்ளக் காரணமாக இருந்தவள்; என்றென்றும் மறக்க முடியாத கற்பனையாக என் மனதில் வேரூன்றிவிட்ட சிறு பெண்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick