திரைக்கதை, வசனம்: மு.கருணாநிதி

காலத்தின் குரல்ராஜன்குறை

‘திரைப்பட வரலாறு, அரசியல் வரலாறு ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்கள் நன்கறிந்த செய்தி,  இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்திய சுதந்திரம் ஆகியவற்றுக்குப் பின், தமிழ் சினிமா புதியதொரு வடிவெடுத்தது என்பதும் அதில் திராவிட இயக்கம், குறிப்பாக 1949-ல் தொடங்கப்பெற்ற தி.மு.க சார்ந்தவர்கள் குறிப்பிடத்தக்கப் பங்குவகித்தார்கள் என்பதும். இதன் பொருட்டே அந்தக் கட்சி, ‘கூத்தாடிகள் கட்சி’ என்று இகழப்பட்டது. தமிழ் சினிமாவும்கூட வசனத்தையே நம்பி வாழ்வதாக இழித்துரைக்கப்பட்டது.

இப்போது பரவலாக தி.மு.க என்ற அரசியல் கட்சிக்கு, அதன் ஆட்சியின் சிறப்பம்சங்கள் சார்ந்து மரியாதை கிடைத்துள்ளது. ஆனால், இன்னமும் அந்தக்கால சினிமாவின், அதில் ஏற்பட்ட மாற்றத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டதாகத் தெரியவில்லை. அதைப் புரிந்துகொள்ள நாம் ‘திரைக்கதை, வசனம்: மு.கருணாநிதி’ என்பதன் முழு அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ‘பராசக்தி’ (1952) திரைப்படம் தொடங்கும்போது, முதல் தலைப்புக் காட்சி, ஆங்கிலத்தில் ‘National Pictures Presents’ என்கிறது. பின்னணியில் தாமரை இலைகள். அடுத்த காட்சி, Parasakthi என்ற படத்தலைப்பு. மூன்றாவது, ‘Produced at AVM Studios: Recorded on RCA Sound System’ நான்காவது, ‘Screenplay and Dialogues: M.Karunanidhi’ தொடர்ந்து, ‘Direction: Krishnan Panju’ அடுத்து, இதே வரிசையில் தமிழில் வரும்போது, ஏ.வி.எம் ஸ்டூடியோ-வுக்குப் பதிலாக மூன்றாவது காட்சியாக, ‘மூலக்கதை: M.S.பாலசுந்தரம்’ என்றும் தொடர்ந்து ‘திரைக்கதை, வசனம் மு.கருணாநிதி’ என்றும் வருகிறது. அதற்குப் பிறகு, பத்துக் காட்சிகள் கடந்துதான் நடிகர்கள் பட்டியல் ஒரே காட்சியாகவும் நடிகைகள் பட்டியல் அடுத்த காட்சியாகவும் வருகிறது.

இரண்டாண்டுகள் கழித்து வெளிவந்த  ‘மனோகரா’ படத்தில், முதல் காட்சி அரண்மனை சபா மண்டபம் பின்புலத்தில் ஆங்கிலத்தில் ‘Manohar Pictures presents MANOHARA’ என்றும் அடுத்த காட்சியில்  ‘With Sivaji Ganesan as Manoharan’ என்றும் வருகிறது. தொடர்ந்து தமிழில் தயாரிப்பு நிறுவனம், படத்தலைப்பு, முதல் இரு காட்சிகளாகவும், மூன்றாவதாக ‘கதை: நாடகப் பேராசிரியர் ராவ்பகதூர் P.சம்பந்த முதலியார்’ என்றும் நான்காவதாக  ‘திரைக்கதை வசனம்: கலைஞர் மு.கருணாநிதி’ என்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழில் சிவாஜி கணேசன் பெயர், நடிகர் பட்டியலில் ஒன்றாகத்தான் வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick