கலைஞரும் தமிழும் | Tamil Launguage with Karunanidhi - Vikatan Thadam | விகடன் தடம்

கலைஞரும் தமிழும்

காலத்தின் குரல்ந.முருகேசபாண்டியன்

மொழியானது, ஆறாவது புலனாக மனிதர்களைச் சமூகத்துடன் இணைக்கிற நுட்பமான பணியைச் செய்கிறது. உடலரசியல்போல மொழி அரசியல், சமூக மாற்றத்தில் முதன்மையிடம் வகிக்கிறது. பரந்துபட்ட நிலத்தினை நாடாக மாற்றுகிற அரசியல் செயல்பாட்டில், தமிழ் மொழி உருவாக்கிய ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகு’ காத்திரமானது. இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புடைய தமிழ் மொழி, காலந்தோறும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. இடைக்காலத்தில் வைதீக இந்து மதமும் சம்ஸ்கிருதமும் ஆதிக்கம் செலுத்தியபோது, அதற்கெதிரான குரல்களைப் புலவர்கள் படைப்புகளில் பதிவாக்கியுள்ளனர். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோயிலில் இறைவனை வழிபாடுவதற்கு சம்ஸ்கிருதமும், கச்சேரிகளில் தெலுங்கும், ஆட்சிமொழியாக ஆங்கிலமும் நிலைபெற்றிருந்த தமிழகத்தில், நீதிக்கட்சியும் பெரியாரின் திராவிட இயக்கமும் முன்னிறுத்திய ‘தமிழ் மொழி அரசியல்’ கவனத்திற்குரியது.

திராவிடர் X ஆரியர், தமிழ் X சம்ஸ்கிருதம் என்ற அரசியலை முன்னெடுத்த சூழலில், தமிழ் மொழி கவனம்பெற்றது. தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாடு குறித்து பெரியார், அண்ணா போன்ற திராவிட இயக்கத் தலைவர்களின் பேச்சுகள், எழுத்துகளால் ஈர்க்கப்பட்டவர்களில் கருணாநிதி என்ற  சிறுவனின் செயல்கள், தனிச்சிறப்புடையன. திருவாரூரில் முப்பதுகளில் பள்ளி மாணவனாக இருந்தபோதே, ‘கலைஞர்’ என்ற கருணாநிதியின் தமிழ் மொழி மீதான ஈடுபாடு தொடங்கிவிட்டது. தாய்மொழியான தமிழை உயர்த்திப் பிடிக்க வேண்டிய நெருக்கடியான சூழலில் கலைஞரின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. ஆரியர்களான பார்ப்பனர்களின் வைதீக சமயத்தின் வருணாசிரம நெறியானது, தமிழர்களை இழிவுபடுத்துகிறது; புராணக் கட்டுக் கதைகள், தமிழர் நெறிக்கு மாறானவை போன்ற கருத்துகள், பள்ளி மாணவப் பருவத்திலேயே கலைஞருக்கு ஏற்புடையதாயின.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick