சுயாட்சியின் சுடரொளி

காலத்தின் குரல்ஆழி செந்தில்நாதன், படங்கள்: சு.குமரேசன்

லைஞர் மு.கருணாநிதியின் சாதனைகள் என்றும் பெருமைகள் என்றும் எவ்வளவோ கூறப்படுகின்றன. அவரது மக்கள் திட்டங்களும் தமிழ்நாட்டின் உயர்வுக்கு ஆற்றிய பங்குகளும் சாதனைகளாகச் சுட்டிக் காட்டப்படுகின்றன. அவரது எழுத்தும் பேச்சும் நினைவாற்றலும் அவரது பெருமைக்கு அணி சேர்க்கின்றன.

ஆனால், ஒரு தலைவரின் செயல்பாடுகளில் எந்தெந்தச் செயல்பாடுகள் நெடுங்கால நோக்கில் செய்யப்பட்ட முக்கியமான நகர்வுகள் எனக் கருதப்படுகின்றனவோ, அந்தப் பங்களிப்புகள்தான் அந்தத் தலைவரின் அரசியல் வாழ்வை மதிப்பிடவும் உதவுகின்றன. அந்த வகையில் கருணாநிதியின் அரசியல் பங்களிப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று, மாநில சுயாட்சி கொள்கை. அரசியல் சாசன ரீதியில் ஏப்ரல் 16, 1974-ல் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அவரது தலைமையிலான அரசு, மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தின் வரலாறு, தமிழக வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலும் மிக முக்கியமான - ஆனால் அவ்வளவாகக் கண்டு கொள்ளப்படாத - வரலாறாகும்.

தி.மு.க 60-களின் தொடக்கத்தில் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்ட பிறகு, தனிநாடு கோரிக்கைக்கு மாற்றாக அறிஞர் அண்ணாவால்  முன்மொழியப்பட்ட கொள்கைதான் ‘மாநில சுயாட்சி’. அந்தக் கோரிக்கையின் அரசியல் அடிப்படையை அண்ணா முன்மொழிந்தார் என்றால், அதற்கான சட்டபூர்வ வடிவத்தை உருவாக்கும் பணி அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கருணாநிதியின் மீதுதான் விழுந்தது.

1965 செப்டம்பர் 26 தேதியிட்ட ‘தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி’ அண்ணாவின் மிக முக்கியமானப் பேட்டி ஒன்றைத் தாங்கிவந்தது. மொழிப்போருக்குப் பிந்தைய தமிழ்நாட்டு அரசியல்களம் சூடேறிக் கிடக்க, அன்றைய ஊடகங்களின் பார்வை அண்ணாவின் மீது இருந்ததில் ஆச்சர்யமில்லை. “இன்று தி.மு.க-வின் முக்கியமான கொள்கைகள் என்ன?” என்று வீக்லி எழுப்பிய கேள்விக்கு அண்ணா பதில் கூறுகிறார், “ 1. நடைமுறையில் உண்மையான கூட்டாட்சியாக இருக்கும் வகையில் இந்திய அரசியல் சாசனத்துக்கு மறுவடிவம் அளித்தல். 2.மாநிலங்களுக்கு முற்றுமுழுமையான சுயாட்சி.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick