தந்தை பெரியாரின் மாணவர்

காலத்தின் குரல்அ.அருள்மொழி

வெற்றிகளைக் கண்ட அளவுக்கு ஈடாக எதிர்ப்புகளையும், துரோகங்களையும், அவதூறுகளையும், பழிசொற்களையும் எதிர்கொண்டவர் கலைஞர். அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொண்டதுபோலவே, இயக்கத்தின் முன்னோடிகள், அமைச்சர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி, விவாதம்செய்து முடிவெடுக்கும் வழக்கத்தைக்கொண்டிருந்த ஜனநாயகப் பண்பு கலைஞரிடம் இருந்தது. அது, அவரின் வெற்றிக்குக் காரணமாயிருந்த முக்கியப் பண்புகளில் ஒன்று.

எல்லா எதிர்ப்புகளையும் தாண்டி, ஒருவரால் எப்படி இவ்வளவு சாதனைகளைச் செய்ய முடிந்தது? இளம்வயதில் கிடைக்கும் சரியான வாய்ப்புகளை விருப்பத்துடன் கற்றுக்கொண்டால், அது பிற்காலத்தில் நெருக்கடியான வேலைகளைச் சமாளிக்க உதவியாக இருக்கும் என்பதை, கலைஞரின் வாழ்க்கையிலிருந்து இன்றைய இளைய தலைமுறை கற்றுக்கொள்ள முடியும். கலைஞர் தன்னுடைய அன்றாட வேலைகளைச் செய்வதில் உள்ள ஒழுங்கையும் நேர்த்தியையும் அவரைச் சந்தித்த ஒவ்வொருவரும் வியந்து குறிப்பிட்டுள்ளனர். இந்தப் பழக்கத்தை இவர் எப்படி கற்றுக்கொண்டார்? ‘ஈரோடு குருகுலத்தில் தந்தை பெரியாரிடம் கற்றுக்கொண்டேன்’ என்று அவரே எழுதுகிறார்.

‘அன்றாடம் காலை 8 மணிக்கெல்லாம் பெரியார் வீட்டில் அவர் முன்னால் அமர்ந்து, அன்றைய தபால்களை அவர் பார்த்து, அது பற்றிய விளக்கங்களை அவரிடம் கேட்டு, அதனைச் செயல்படுத்துகிற வழி வகைகளை நாங்கள் செய்திட வேண்டும். அதன் பிறகு, அலுவலக வேலை. மாலையில் பெரியார் அலுவலகம் வருவார். ‘குடி அரசு’ இதழுக்கான தலையங்கத்தை எழுதிவிட்டு, அதனை எங்களிடம் படித்துக்காட்டிவிட்டு, அலுவலகத்தைவிட்டுப் புறப்படுவார்.

ஒவ்வொரு நாளும் இரவு பெரியார் வீட்டில் உணவு முடிந்ததும், பெரியார் தன் வீட்டு மாடியில் காற்றோட்டமான பகுதியில் எங்களை உட்கார வைத்துக்கொண்டு சமுதாய சீர்திருத்தங்கள், அரசியல் மாற்றங்கள் இவற்றைப் பற்றியெல்லாம் நீண்ட நேரம் விளக்கங்கள் அளிப்பார். எங்களுக்குத் தூக்கம் வருவதைத் தெரிந்துகொண்ட பிறகே அவர் தூங்கக் கிளம்புவார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick