எதிரிகளால் தாம் ஏன் அவரை வெறுக்கிறோம் எனச் சொல்ல இயலாமற் போனதே கலைஞரின் சாதனை

காலத்தின் குரல்

லைஞரின் மறைவு குறித்து இன்று வெளிப்படும் பல்வேறுபட்ட கருத்துக் குவியல்களைப் பார்க்கும்போது, ஒரு விஷயம் எனக்கு மிகவும் சுவாரஸ்யமாகப் பட்டது. நீண்டகாலம் அரசியல் உலகில் தடம் பதித்து, எண்ணற்ற மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு தலைவர் அவர். அப்படியான ஒருவரின் மறைவு என்கிற அளவில், குறைந்தபட்ச அனுதாபம்கூட இல்லாமல், வெளிப்படையாக அவர்மீது வெறுப்பைக் கக்குபவர்கள் அடைகிற ஒரு சங்கடம்தான் அந்த சுவாரஸ்யத்துக்குரிய அம்சம். அவர்களால் வெறுப்பைத்தான் கக்க முடிகிறதே ஒழிய, ஏன் தாங்கள் இந்த வெறுப்பைக் கக்க நேர்கிறது என்பதை வெளிப்படையாகச் சொல்ல முடிவதில்லை.

கலைஞரின் சமாதிக்கு மெரீனாவில் இடம் ஒதுக்கக் கூடாது என வெளிப்படையாகப் பேசியும் எழுதியும் வெறுப்பைக் கக்கும் அவர்கள், “கலைஞர் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வரலாம் எனச் சட்டம் கொண்டுவந்தார், பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டை 16-லிருந்து 18 சதமாகவும் பிற்படுத்தப் பட்டோருக்குமான இடஒதுக்கீட்டை 25 சதத்திலிருந்து 31 சதமாகவும் உயர்த்தினார், சாதிமறுப்புத் திருமணங்களுக்குப் பரிசுகள் அளித்து ஊக்குவித்தார், தமிழ்நாட்டை இந்தி இல்லாத மாநிலமாக ஆக்கினார், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கச் சட்டம் இயற்றினார், எல்லாச் சாதியினரும் ஒன்றாக வாழும் சமத்துவபுரங்களை அமைத்தார், முஸ்லிம்களுக்கு உள்ஒதுக்கீடு அளித்தார், ‘பாலம் கட்டுவதற்கு, இராமன் என்ன என்ஜினீயரா?’ எனக் கேட்டார், இலங்கையிலிருந்து இந்திய இராணுவம் திரும்பி வந்தபோது, அதை வரவேற்காமல் அவமதித்தார் - இதையெல்லாம் நாங்கள் எப்படிச் சகித்துக்கொள்வோம், இவற்றுக்காகத்தான் நாங்கள் அவரை ஜென்ம வைரியாகப் பார்க்கிறோம்” என எப்படிச் சொல்வார்கள்?

இப்படித் தன் அரசியல் எதிரிகளை ஏன் தாங்கள் அவரை எதிர்க்கிறோம் எனச் சொல்ல இயலாதவர்களாக ஆக்கியதுதான், கலைஞர் அரசியல் களத்தில் அடைந்த முக்கிய வெற்றி எனத் தோன்றுகிறது. அவர்மீது விமர்சனங்களே இல்லை என்பதோ அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதோ அல்ல. ஆனால், எந்த விமர்சனங்களும் மேலே குறிப்பிட்ட தமிழ்ச் சனாதனிகள் ஏன் அவரை வெறுத்தார்கள் என்பதைக் கணக்கில்கொண்டதாகவே இருக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick