நையாண்டியை ஆயுதமாய் ஏந்திய மலையாளக் கவி - செம்மனம் சாக்கோ

இந்திரன்

கேரள சாகித்ய அகாடமி விருது பெற்ற மலையாளக் கவி செம்மனம் சாக்கோ (Chemmanam Chacko), 14.08.2018 அன்று கொச்சியில் தனது 92-வது வயதில் காலமானார். இவர், கேரள வாழ்க்கையின் சாதாரண மனிதர்களின் சமூக அரசியல் பிரச்னைகளைச் சாதாரண மொழியில் பகடியாக அணுகும் கவிதைகளுக்காகப் பெயர்பெற்றவர். ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தைக் கனவுகண்ட இவரது 50 ஆண்டுக்கால இலக்கிய வாழ்க்கையில், இவர் பகடி செய்யாத கேரள நிறுவனம் ஒன்றுகூடக் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.

கவிதைபோலத் தெரியாத, சாதாரண மனிதனின் பேச்சுக்கும் எழுத்து மொழிக்கும் ஓர் உறவை ஏற்படுத்தக்கூடிய ஒரு மொழிநடையை சாக்கோ தேர்ந்தெடுத்தார். “கவிதை என்றைக்குத் தோன்றியதோ, அன்றைக்கே மக்களின் மொழியைக் கவிதைக்குப் பயன்படுத்தலாமா, வேண்டாமா என்கிற கேள்வி தோன்றிவிட்டது” என்பது எலியட்டின் வாக்கு.

டி.எஸ்.எலியட் தனது ‘கவிதையின் சமூகச் செயல்பாடு’ எனும் கட்டுரையில் கவிதை, தொல்பழங்காலத்திலிருந்து என்ன மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது என்பதைக் கணக்கிலெடுத்துக்கொள்கிறார். ஆதிகாலத்தில் கவிதை மந்திர உச்சாடனங்களாகவும், கிரேக்கர்களின் மதச்சடங்குகளிலிருந்து உருவாக்கப்பட்ட நாடகச் செயல்பாடாகவும், ஷெல்லி போன்றவர்களின் காலத்தில் சமூகச் சீர்திருத்தச் செயல்பாடாகவும் இருந்து வந்திருக்கும் வரலாறுகளைப் பார்க்கிறபோது, இன்றைய அரசியல் செயல்பாட்டின் ஒரு பகுதியாகக் கவிதை இருப்பதில் தவறில்லை என்று தெரியவருகிறது. எனவேதான், செம்மனம் சாக்கோ கவிதைக்கென்று இருந்த கல்யாண குணங்களைப் பற்றி கவலைப்பட்டதைக் காட்டிலும் அதன் சமூகச் செயல்பாடு குறித்து அதிகம் கவலைப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick