செம்புலத்து மாயோன் பொக்லைன் தேரில் பவனி | Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

செம்புலத்து மாயோன் பொக்லைன் தேரில் பவனி

மைதிதான் அதிகாரம் விரும்பிக் கேட்கும் இசை
பொக்லைன்கூட சாந்தமானதுதான்
தேவைக்கதிமாகச் சிறு சப்தமும் எழுப்புவதில்லை
செடியிலிருந்து பூக்களைப் பறிப்பதுபோல்
குடியிருப்புகளைப் பறித்து வீசுகிறது.
இடிப்பதற்கிடையே அறையில் அமர்ந்து
கதை படிப்பவர்களைத் தொந்தரவு செய்யத் தெரியாத
அப்பாவி இயந்திரம்
அடுத்த வேளைக்கும் சேர்த்து
சமைத்து எடுத்துக்கொள்ள அனுமதிக்கின்றது.
தூங்குபவர்களைக்கூட அது தட்டி எழுப்புவதில்லை
பதமாகச் சுவர்களை அறுக்கத் தெரிந்தவை பொக்லைனின் கைகள்.
குளியலறையில் வயது வந்த மகள்
நறுமணத் தைலமிடுவதைக்கூட நிறுத்த வேண்டியதில்லை
கண்களில் கருப்புத் துணியொன்றைக்
கட்டிக்கொள்ளும் கண்ணியம் மிகுந்தது பொக்லைன்.
சுவர்களை இடிக்கக் கை உயர்த்தும்போது
யானையின் தும்பிக்கை ஆசீர்வாதத்தில்
சிரிக்கும் சிறுவனென நீங்கள் ஜென் மனநிலையில்
அதைப் பார்க்கப் பழக வேண்டும்.
‘அந்தச் சுவரில் ஓவியம் இருக்கிறது’
அழாதே மகளே! அரசு கைநிறையப் பொற்காசுகள் தருகிறது.
மத்தியஆசியப் பழமொன்றின் பெயரில்
வட அமெரிக்கக் கம்பனியின்
மலிவுவிலை மடிக்கணினி உனக்குத்தான்
ஆயிரம் ஓவியங்களை வரையலாம் அழிக்கலாம்.
அரசுக்குப் பூஞ்சை மனசு
சிறுபிள்ளைகளுக்கொன்றெனில்
இப்படித்தான் பதறிவிடும்.
அடுத்தொரு வீட்டில் பூ பழங்களோடு
ஆரத்திகள் காத்திருக்கின்றன
பொக்லைனின் நெற்றியில் முத்தமிட்டு வரவேற்பவருக்கு
கூடுதல் சில்லறைகள் தட்டில் விழுமென்று.
கிழவனோடு தொடங்கிய வாழ்வின் ஈரம் காய்ந்த குடிலுக்குள் அமர்ந்து
வயதான பெண்ணொருத்தி பெருங்குரலெடுத்து அழுகிறாள்
பொக்லைன் முகத்தில் அமைதியோ அமைதி.

ஸ்டாலின் சரவணன்
ஓவியம்: வேலு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick