லூப்

ராபர்ட் பொலோனோ; தமிழில்: செ.ஜார்ஜ் சாமுவேல்

ஜூலியனின் இருப்பிடத்திலிருந்து சில தெருக்களைத் தாண்டி
லா கெரேறோ-வில் அவளுக்கு வேலை.
17 வயதில் அவள் தனது மகனை இழந்திருந்தாள்.
இருண்ட விசாலமான ‘ட்ரிபால்’ விடுதியின்
குளியலறையுடன்கூடிய, சில வருட காலங்கள் வசிப்பதற்கு ஏதுவான அந்த அறையில்
நினைவுகள் அவளை அழச் செய்தன.
மாயத்தோற்ற நினைவுகளாலான புத்தகத்தையோ
அச்சமூட்டும் கவிதைகளையோ எழுத ஏற்ற இடம் அது.
ஒல்லியான லூப், சிறுத்தைப் புள்ளிகளால் நிரம்பிய நீண்ட கால்களைப் பெற்றிருந்தாள்.
முதல்முறை என்னிடம் குறிவிறைப்புகூட இல்லை,
அதை நான் விரும்பவும் இல்லை.
லூப் பேசிக்கொண்டிருந்தாள்,
அவளைப் பற்றியும் அவளைப் பொறுத்தவரை மகிழ்ச்சி என்றால் என்ன என்பது பற்றியும்.
ஒரு வாரத்திற்குப் பிறகு சந்தித்துக்கொண்டோம்,
பழைய ‘கேடிலாக்’ காரில் சாய்ந்தபடி
மற்ற பதின்ம வயது பாலியல் தொழிலாளிகளுடன் நின்றிருந்தாள்.
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதில் மகிழ்ச்சியடைந்தோம்.
அதன் பின்னர் லூப், தனது வாழ்வைப் பற்றிப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தாள்,
சில நேரங்களில் அழுதபடியும் சில சமயங்களில் புணர்ச்சியிலும்
பெரும்பாலும் படுக்கையில் நிர்வாணமாக விட்டத்தை வெறித்தபடியும்
கைகளைக் கோத்துக்கொண்டு...
பிறக்கும்போதே நோய்வாய்ப்பட்டிருந்த அவளது மகன் குணமடைந்துவிட்டால்,
தனது தொழிலை விட்டுவிடுவதாகக் கன்னி மரியாளுக்கு வாக்கு தந்திருந்தாள்.
ஓரிரு மாதங்கள் மட்டுமே அவளால் தனது சத்தியத்தைக் காப்பாற்ற முடிந்தது;
விரைவிலேயே அவள் தனது தொழிலுக்குத் திரும்பிவிட்டாள்.
சீக்கிரமே அவளது மகன் இறந்துவிட்டான்.
லூப் சொன்னாள்: “அது எனது தவறு,
என்னால் முறிக்கப்பட்ட சத்தியத்தின் கூலியாக
அந்தக் குட்டித் தேவதையைக் கன்னி மரியாள் எடுத்துக்கொண்டாள்.”
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை
நான் குழந்தைகளை விரும்புகிறேன், அது மட்டும் நிச்சயம்.
ஆனால், ஒரு மகனைப் பெற்றுக்கொள்வது பற்றிய
புரிதலுக்கு இன்னும் சில வருடங்கள் பிடிக்கும்.
எனவே, நான் அமைதியாக இருந்தேன்,
அந்த விடுதியின் அமைதியான மோனத்திலிருந்து கிளம்பும்
பேயச்சமூட்டும் பீதியைப் பற்றிச் சிந்தித்தபடி...
ஒருவேளை அறைச்சுவர்கள் அடர்த்தியானவையாக இருக்கலாம் அல்லது
நாங்கள் இருவர் மட்டுமே அந்த மொத்த விடுதியிலும் இருக்கிறோம்?
அல்லது மற்றவர்கள் யாரும் முனங்குவதற்குக்கூட வாயைத் திறக்கவில்லை.
இரங்கத்தக்க வகையில் ஓர் ஆணாக லூப்பை எளிதில் புணர்ந்துவிட முடியும்
உங்களது லயத்திற்கு ஏற்ப அவளை வசப்படுத்துவதும் எளிது. 
மிகச் சமீபத்தில் ‘புக்காரளி’ திரையரங்கில்
தான் பார்த்த திகில் படங்களைப் பற்றி அவள் பிதற்றும்போது
கேட்டுக்கொண்டிருப்பதும் எளிது.
ஓர் இரவில் தன் சிறுத்தைக் கால்களால் என் இடையைச் சுற்றிக்கொண்டு
அவளின் முகத்தை என் மார்பில் புதைத்து
என் மார்புக் காம்பையோ இதயத் துடிப்பையோ தேடியபடி சொன்னாள்:
“இதோ இந்த உறுப்பைத்தான் நான் உறிஞ்ச வேண்டும்...”
“எதை லூப்?”
“உனது இதயத்தை!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick