தலையங்கம் | Editor Opinion - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

தலையங்கம்

ந்தியா, தேர்தல் ஜனநாயகத்தை அடிப்படையாகக்கொண்ட நாடு. நாடாளுமன்றத்துக்கான தேர்தலும் தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவிருப்பதையொட்டி, ஒட்டுமொத்தத் தமிழ்ச்சூழலும் பரபரப்பும் எதிர்பார்ப்புமாய் இயங்கிக்கொண்டிருக்கிறது. வாக்களிக்கும் உரிமை என்பது, ஆள்வோரைத் தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை வாக்காளர்களுக்கு வழங்கியிருக்கிறது. அந்த அதிகாரம் குறித்த விழிப்புணர்வும் மதிப்புணர்வும் மிகவும் அவசியமானது.

கடந்த ஐந்தாண்டுகளில் கருத்துச் சுதந்திரம், கல்விக்கொள்கை, மதவாதம், சகிப்புத்தன்மை, தனியார்மயமாக்கல், மாநில உரிமைகள், ஆணவக்கொலைகள், பெண்களுக்குப் பாதுகாப்பின்மை, மொழியுரிமை என்று பல்வேறு விஷயங்கள் குறித்த விவாதங்கள் தொடர்ச்சியாக நடந்திருக்கின்றன. இந்த விவாதங்களுக்கான பயன்மதிப்பு என்ன என்பதை இந்தத் தேர்தல் நமக்குக் காட்டும். நல்வாய்ப்பாகத் தமிழகத்தில் சில எழுத்தாளர்கள் வேட்பாளர்களாகக் களத்தில் நிற்கிறார்கள். வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக அவர்கள் இருந்தாலும், அவர்களின் வாசிப்பு அனுபவமும் சமூக அக்கறையும் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தத் தேர்தல் முறை என்பதுதான் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வா, எந்த முறைகேடுகளுமின்றிச் சரியாகத்தான் ஒவ்வொரு முறையும் தேர்தல்கள் நடத்தப்படுகின்றனவா, தேர்தலில் எல்லாத் தரப்பு மக்களுக்கும் சமமான வாய்ப்பு அளிக்கப்படுகிறதா, இந்திய அரசு என்பதும் இந்திய நாடாளுமன்றம் என்பதும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள், தேசிய இனங்கள், மொழிகளின் நலன்களுக்கும் சமமான முக்கியத்துவத்தை அளிக்கிறதா, பெரும்பான்மைவாதம் என்பதே ஜனநாயகமாகிவிடுமா, பிரதிநிதித்துவத்துக்கும் பெரும்பான்மைவாதத்துக்குமான இடைவெளியை எப்படி நிரப்புவது... இப்படியாக ஓராயிரம் கேள்விகள் நம்முன் நிற்கின்றன. என்றபோதிலும், நடைமுறை எதார்த்தத்தின்படி இன்றையத் தேர்தல் ஜனநாயகத்தைச் சாதாரண மக்கள் பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து உரையாட வேண்டிய தருணமிது.

அடுத்து அமையப்போகும் அரசு, சாதாரண மக்களின் நலன்களைக் கருத்தில்கொண்ட அரசாக அமைவது என்பதுதான், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கைக்கு வலுவூட்டுவதாக இருக்கும்.

-  ஆசிரியர்