எல்லாம் எழுதப்பட்டுவிட்டன | magudeswaran sharing about cinema literature - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

எல்லாம் எழுதப்பட்டுவிட்டன

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

மிழர் வாழ்வில் பாடலைப் பிரிக்க முடியாது. பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் ஏதேனும் ஒரு பாடலைப் பாடிக் கடக்கிறது நம்மினம். நாம் ‘மொழி மக்களாக’ அறியப்படுவதும் நம் மொழி, செம்மையுற்ற பண்மொழி என்பதும் ஒன்றோடொன்று தொடர்புடையது. நம்முடைய நாட்டார் பாடல்கள் தாலாட்டு, அம்மானை, தெம்மாங்கு, ஒப்பாரி என்று பல வகைகளில் கிளை விரித்திருக்கின்றன. நம் தாயார் தாலாட்டுப் பாடல் பாடித் தொட்டிலிட்டுத் தூங்கவைத்து வளர்த்தார். என் சிறுவத்தில் எனக்குப் பின்னர் பிறந்த பிள்ளைகள் தாலாட்டினைக் கேட்டு வளர்ந்ததைக் கண்ணாரக் கண்டிருக்கிறேன். ஊரில் ஓர் இறப்பு என்றால், ஒலிபெருக்கியினைக் கட்டிவிடுவார்கள். ‘வீடுவரை உறவு’,  ‘போனால் போகட்டும் போடா’ போன்ற பாடல்கள் வழமைக்கு ஒலிக்கும். பிறகு, ஊர்ப் பாட்டிகளிடம் ஒலிவாங்கி தரப்பட்டு அவர்கள் ஒப்பாரி பாடத் தொடங்குவார்கள். கரையாத கல் நெஞ்சும் கரையும்படி ஒப்பாரி பாடுவார்கள். இழவுக்கு வருகின்றவர்கள் தொலைவிலிருந்தே ஒப்பாரியைக் கேட்டு மனங்கலங்கி அழுதபடி வந்துசேர்வார்கள். ஒப்பாரிக்கு அழாதவர்கள், கண் ததும்பாதவர்கள் கலை, இலக்கியம், பாடல், இசை குறித்தெல்லாம் பேசுவதற்கே தகுதியற்றவர்கள்.