ஒரு மாத்திரை அளவுள்ள சிறிய நிம்மதி | Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

ஒரு மாத்திரை அளவுள்ள சிறிய நிம்மதி

ஜீவன்பென்னி - ஓவியம் : மணிவண்ணன்

ப்போதும் தேடிக்கொண்டிருக்கும் ஒரு துரோகத்தின் கறை
மிகப்பழைய வடிவத்திலே கிடைக்கின்றது
முழுவதும் நிறைந்திருப்பது மாதிரியான அதன் வாசனை
சற்றே கடக்க முடிந்திடாத ஒரு தற்கொலையில் எதையெதையோ
செய்து காண்பிக்கிறது,
அதன் எல்லா முகங்களுக்கும் பின்னாலிருக்கும் ஒரு துளி விஷத்தை
நமக்குப் பிடித்த மொழியின் ஒற்றைப் புள்ளியில்
பருகிக்கொள்ளலாம்,
அதன் இருண்மைகளைப் பேசிப்பேசியே புரிந்தும் கொள்ளலாம்.
உரையாடல்கள் நின்றுபோய்விட்ட ஓருறவில்,
மிகக் கச்சிதமாகப் பொருந்திக்கொண்டிருக்கின்றன சில விடுபடல்கள்.
சிறிய நிசப்தத்தில் விழித்துக்கொள்கிறது ஒரு தனித்த பகல்.
நிறைய்ய சேமிக்க முடிந்திடாத ஒரு கைப்பிடியளவு தானியங்கள்
பழக்கப்பட்ட இரக்கங்களைப்போல்
அவ்வெளி முழுவதும் உடல் சிதறிக் கிடக்கின்றன.
ஒரு மாத்திரை அளவுள்ள சிறிய நிம்மதியை
அவ்வளவு விருப்பமாக விழுங்கிக்கொள்வதற்கு,
எப்போதும் தேடிக்கொண்டிருக்கும் ஒரு துரோகத்தின் கறையை
எப்படியாவது பழக்க வேண்டும்
கூடுதலாக
அதன் வாசனையையும்,
அதன் மூர்க்கத்தையும்...  

நீங்க எப்படி பீல் பண்றீங்க