கறுப்பு நகைச்சுவையும் சுயபகடியும் கலந்த கதைகள் | Postmodern transgressive tamil writer Charu Nivedita - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

கறுப்பு நகைச்சுவையும் சுயபகடியும் கலந்த கதைகள்

1981-ம் ஆண்டு, கோவை மாநகரில் நடைபெற்ற ‘இலக்கு’ கருத்தரங்கில், ‘சாரு’ என்று அழைக்கப்படுகிற சாரு நிவேதிதாவை முதன்முதலாகப் பார்த்தேன். மதுரை ‘நிஜ’ நாடக இயக்கம், கருத்தரங்கில் நடத்திய வீதி நாடகங்களில் நடிப்பதற்காக நானும் போயிருந்தேன். தீவிரமான இடதுசாரிப் பின்புலத்தில் பல்வேறு தரப்பினர் பங்கேற்ற அந்தக் கருத்தரங்கு அரசியல்ரீதியில் முக்கியமானது. மாறுபட்ட தோற்றத்தில் கவர்ச்சிகரமாக விளங்கிய இளைஞரான சாருவின் உடல்மொழியும், கருத்தரங்கில் தீவிரமாக எதிர்வினையாற்றிய செயலும் பல்கலைக்கழக மாணவனான எனக்குப் பிடித்திருந்தன. அன்றைய காலகட்டத்தில்  ‘கணையாழி’ பத்திரிகையில் பிரசுரமாகி யிருந்த சாருவின் ‘முள்’ கதை வித்தியாசமான கதைசொல்லல் காரணமாக, பலருடைய கவனத்தையும் கவர்ந்திருந்தது. அதன்பின், வெளியான சாருவின் ‘கிரிக்கெட்டை முன்வைத்து புத்திஜீவிகளுக்கு ஒரு முட்டாள் சொல்லிக்கொண்டது’, ‘கர்நாடக முரசும் நவீனத் தமிழ் இலக்கியத்தின்மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும்’, ‘நேநோ’ போன்ற கதைகள், இறுகிக் கெட்டித் தட்டியிருந்த தமிழர் மனங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மாறுபட்ட மொழியில் விரிந்திடும் கதைசொல்லலும், கதையாடலில் பொதிந்திருக்கிற பாலியலும் வன்முறையும் தமிழில் அதுவரை சொல்லப்பட்ட கதைப்போக்கை மறுதலித்தன. அதேவேளையில், சாருவின் தடாலடியான விமர்சனங்களும், வித்தியாசமான நாடக முயற்சிகளும், இலக்கியக் கூட்டத்தில் அதிரடியான பேச்சுகளும் அவரைக் கலகக்காரனாகச் சிறுபத்திரிகை சார்ந்த இலக்கிய உலகில் கட்டமைத்தன. அன்றைய காலகட்டத்தில், சிறுபத்திரிகைக்காரன் என்றால், கலகக்காரன் என்ற பிம்பம் உருவாவதற்குச் சாருவும் அவருடைய சகாக்களும் ஒரு காரணம். அதற்குப் பின்னர் ‘ஜீரோ டிகிரி’ முதலான நாவல்கள், வித்தியாசமான கட்டுரைகள் என சாரு எழுதிய எழுத்துகள், அவருடைய ‘கலகக்காரன்’ பிம்பத்திற்குப் பொருந்திப்போயின. அவ்வப்போது அரசியல், திரைப்படம் தொடர்பாக சாரு தெரிவிக்கிற முரண்பாடான கருத்துகள் காரணமாக, அவரை அராஜகவாதியாகச் சிலர் கருதுகின்றனர். அண்மையில், சாரு எழுதிய சிறுகதைகளை ஒட்டுமொத்தமாக வாசித்தபோது, சிறுகதை உலகில் அவருடைய தனித்துவம் புலப்பட்டது.

எழுபதுகளில் நட்சத்திரமாக மின்னிய சிலரின் சிறுகதைகளை இன்று மறுவாசிப்புக்குள்ளாக்கும்போது, அலுப்பாக இருக்கிறது. முன்னர் கொண்டாடப்பட்ட சில படைப்பாளர்கள் இலக்கிய வரலாற்றில் பெயர்களாகக்கூட இடம்பெறாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சாருவின் இலக்கிய பிம்ப ஆளுமையில், சிறுகதைகள் ஒப்பீடற்றவை என்று கட்டுரையின் தொடக்கத்திலே சொல்வதில் எனக்குத் தயக்கம் எதுவுமில்லை. சாரு என்ற பெயர் பொதுப்புத்தியில் உருவாக்கியிருக்கிற கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு, அவர் எழுதியுள்ள 63 கதைகளை வாசிக்கும்போது ஏற்படுகிற அனுபவங்கள்தான் முக்கியமானவை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க